பா.ஜ., உத்தரவின்படி செயல்படுவதா? கேரள கவர்னர் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!
பா.ஜ., உத்தரவின்படி செயல்படுவதா? கேரள கவர்னர் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!
ADDED : ஜன 29, 2024 05:06 AM

திருவனந்தபுரம்: 'மத்தியில் ஆளும் பா.ஜ., உத்தரவின்படி, கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். அவருக்கு எத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டாலும் எங்களின் போராட்டம் தொடரும்' என, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., தெரிவித்துள்ளது.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுங்கட்சி சார்பிலும், அந்த கட்சியின் மாணவர் அமைப்பினர் சார்பிலும் தொடர்ந்து கருப்புக்கொடி காட்டுவது உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, கொல்லம் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் சென்ற கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு, நிலமேல் என்ற இடத்தில், ஆளும் மார்க்.கம்யூ., கட்சியின் ஆதரவு பெற்ற, எஸ்.எப்.ஐ., எனப்படும் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோபமடைந்த அவர், காரில் இருந்து கீழே இறங்கி தர்ணாவில் ஈடுபட்டார். இரு மணி நேரத்துக்கும் மேல் கவர்னர் ஆரிப் முகமது கான் தர்ணாவில் ஈடுபட்டது, பரபரப்பைஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம், ஆளும் மார்க்.கம்யூ., மாநில செயலர் எம்.வி.கோவிந்தன் நேற்று கூறியதாவது: மத்தியில் ஆளும் பா.ஜ., உத்தரவின்படி, கவர்னர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். தனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, கேரள அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய அரசை அவர் நிர்பந்தித்து வருகிறார்.
கவர்னர் என்ன செய்தாலும், வரும் லோக்சபா தேர்தலில், கேரளாவில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ., வெற்றி பெறாது. கொல்லத்தில், எஸ்.எப்.ஐ., அமைப்பினரை நோக்கி கவர்னர் தான் சென்றார். ஆனால் தன்னைத் தாக்க முயன்றதாக, அவர் பொய் கூறுகிறார். எத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், கவர்னருக்கு எதிரான போராட்டங்கள் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.