வழக்கை இழுத்தடிக்க கிரீஷ்மா தந்திரம் சாதுரியமாக முறியடித்த கேரள போலீஸ் 39 பேர் தூக்கு கயிறுக்காக காத்திருப்பு
வழக்கை இழுத்தடிக்க கிரீஷ்மா தந்திரம் சாதுரியமாக முறியடித்த கேரள போலீஸ் 39 பேர் தூக்கு கயிறுக்காக காத்திருப்பு
ADDED : ஜன 22, 2025 02:03 AM
நாகர்கோவில்:வழக்கை இழுத்தடிப்பதற்காக குற்றம் நடந்த இடம் தமிழக எல்லை என்பதால் விசாரணையை தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் என்ற காதலன் ஷாரோன் ராஜூவை கஷாயத்தில் விஷம் வைத்து கொலை செய்த காதலி கிரீஷ்மாவின் கோரிக்கையை கேரளா போலீசார் சாதுரியமாக முறியடித்தது தெரிய வந்துள்ளது.
காதலன் ஷாரோன் ராஜுவுக்கு கஷாயத்தில் விஷம் கொடுத்து கொலை செய்த காதலி கிரீஷ்மாவுக்கு நெய்யாற்றின்கரை செஷன்ஸ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கிரீஷ்மா கொடுத்த கஷாயத்தை குடித்த பின் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருவதை நண்பர்களிடம் ஷாரோன்ராஜ் கூறினாலும் அதை வெளியே சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 11 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இறந்தபோது நண்பர்கள் இதை கசிய விட்டனர். இதன் அடிப்படையில் தான் அவரது பெற்றோர் கிரீஷ்மா மீது சந்தேகம் இருப்பதாக நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் சரியாக மாட்டிக் கொண்ட கிரீஷ்மா அதிலிருந்து தப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
வழக்கு விசாரணை நடந்த நிலையில் கிரீஷ்மா தரப்பில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் குற்றம் நடந்திருப்பதாக போலீசார் கூறும் இடம் தமிழக எல்லை பகுதியில் வருவதால் கேரளாவில் இந்த வழக்கை நடத்த இயலாது என்றும் வழக்கை தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். கிரீஷ்மாவின் இந்த நடவடிக்கையை கேரள போலீஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இதையடுத்து கேரள டி.ஜி.பி., தலைமையில் போலீசாரின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. போலீசாரின் புலனாய்வு அறிக்கையில் கேரள எல்லை பகுதியான பாறசாலையில் இருந்து ஷாரோன்ராஜ் கடத்திச் செல்லப்பட்டு விஷம் கொடுக்கப்பட்டதாக மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. நீதிபதி தீர்ப்பளித்த போது உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி ஷாரோன்ராஜ் கடத்திச் செல்லப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவிலும் கிரீஷ்மாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டில் கேரள மாநிலத்தின் முதல் பெண் குற்றவாளி என்பதால் அவருக்கு திருவனந்தபுரம் மகளிர் சிறையில் ஒன்றாம் எண் வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அட்டக்குளங்கரை மகளிர் சிறையில் உள்ள 14 வது பிளாக்கில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி பஷீர், எட்டு மாதங்களில் நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளார். எட்டு மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் பெருமாதுறையைச் சேர்ந்த சாந்தகுமாரி கொலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பஷீர் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த ரபீக்கா பீவி 55, அவரது மகன் ஷெபிக் 27, பாலக்காட்டைச் சேர்ந்த அல் அமீன் 27, ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்திருந்தார். கேரளாவில் கிரீஷ்மாவையும் சேர்த்து மொத்தம் 39 பேர் தூக்கு கயிறுக்காக காத்திருக்கின்றனர்.
1991ல் கேரளாவில் 14 பேரை சுத்தியலால் அடித்து கொலை செய்த ரிப்பர் சந்திரன் என்பவருக்கு கண்ணூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் யாருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.