மத்திய அரசே சொல்லிடுச்சு; கேரளா முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்!
மத்திய அரசே சொல்லிடுச்சு; கேரளா முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்!
ADDED : செப் 21, 2024 10:00 AM

திருவனந்தபுரம்: உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் (SFSI) கேரளா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது; தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தால் (FSSAI), உணவுப் பாதுகாப்பு குறியீடு மாநில பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஹோட்டல்கள், உணவுப்பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் செய்யப்பட்ட மதிப்பீடுகள், பதியப்பட்ட வழக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கை அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு குறியீடு நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தொடரந்து இரண்டாம் ஆண்டாக, கேரளா இந்த இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த 2022ம் ஆண்டில், கேரளா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழகம், இம்முறை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் குறியீட்டில் ஜம்மு காஷ்மீர் மூன்றாவது இடத்தைப் பிடித்து வருகிறது.
உணவு தரம்
இது குறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:நாம் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியம். ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கு உணவின் தரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியம் அவசியம்.
விதிமுறைகளின் தரநிலைகளை அமைப்பது அரசின் முதன்மைக் கடமை. பாதுகாப்பான உணவு மக்களை சென்றடைவதை உறுதி செய்வதில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., (FSSAI) முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.