உத்தராகண்டில் கேரள சுற்றுலா பயணியர்... 28 பேர் மாயம் ! : தாராலி கிராமத்தில் தொடர்கிறது மீட்பு பணி
உத்தராகண்டில் கேரள சுற்றுலா பயணியர்... 28 பேர் மாயம் ! : தாராலி கிராமத்தில் தொடர்கிறது மீட்பு பணி
ADDED : ஆக 07, 2025 12:46 AM
உத்தரகாசி: உத்தராகண்டில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாராலி கிராமத்தில், கனமழைக்கு இடையே நேற்று இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்தன. நான்கு பேர் பலியான நிலையில், இதுவரை 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 35 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா சென்ற கேரளாவை சேர்ந்த 28 பயணியர், இந்த விபத்தில் சிக்கி மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. உத்தராகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் நேற்று முன்தினம் மேகவெடிப்பு காரணமாக, குறைந்த நேரத்தில் அதிதீவிர மழை பெய்தது. கீர் கங்கா நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால், மலை உச்சியில் இருந்து சேறும், சகதியுடன் பெருவெள்ளம் பெருக்கெடுத்தது.
இதில், மலைப்பகுதிகளில் இருந்த வீடுகள், ஹோட்டல்கள், உள்ளிட்ட கட்டடங்களை பெருவெள்ளம் வாரி சுருட்டிச் சென்றது. முதற்கட்டமாக 4 பேர் மண்ணில் புதைந்து உயிர் இழந்தது தெரியவந்தது.
மண்சரிவில் ஏராளமான வீடுகள் புதையுண்டு கிடக்கின்றன. பெருவெள்ளத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தாராலி கிராமத்தின் பாதி பகுதி மண்ணோடு மண்ணாக புதைந்து போனதாக தெரியவந்துள்ளது.
முதல்வர் ஆய்வு இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. இடிபாடுகளில் சிக்கியோர், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டோர் என, இதுவரை 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆகாஷ் பன்வார், 35 என்பவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.
கங்கோத்ரி செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை முழுதும் மண்சரிந்து கிடப்பதால், அவற்றை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், லிமாச்சா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலமும் அடித்துச் செல்லப்பட்டதால், தாராலியில் இருந்து அப்பகுதிக்கு மீட்புக் குழுவை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்போதைய நிலவரம் குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார்.
அதன் பின் பேசிய அவர், ''மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. ராணுவம், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதியில் முகாமிட்டுள்ளனர்,'' என்றார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது. மண்சரிவில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுவதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
28 பேர் மாயம் கேரளாவை பூர்வீகமாக கொண்ட, 28 சுற்றுலா பயணியரும் பெரு வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர். மஹாராஷ்டிராவில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த 20 பேரும், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த எட்டு பேரும் சுற்றுலாவுக்காக சமீபத்தில் உத்தராகண்ட் சென்றனர்.
தாராலி கிராமத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது இவர்கள் அனைவரும் காணாமல் போயுள்ளனர்.
சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஏஜன்சியும் அவர்களது நிலை குறித்து எந்த தகவலையும் இதுவரை வழங்கவில்லை என, மாயமானவர்களின் குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.