ADDED : ஜன 22, 2026 12:12 AM

கோழிக்கோடு: பொய் பாலியல் சீண்டல் புகார் அளித்த கேரள பெண் ஷிம்ஜிதா முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் கோழிக்கோடை சேர்ந்தவர் தீபக், 42. இவர் கடந்த 16ல் கண்ணுாருக்கு அரசு பஸ்சில் சென்றார். அப்போது அதே பஸ்சில் பயணித்த ஷிம்ஜிதா முஸ்தபா, 35, என்ற பெண், 'செல்பி' வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
அதில், வீடியோவில் தனக்கு பின்னால் நிற்கும் நபர் பஸ்சில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தீபக் மீது குற்றம் சுமத்தி இருந்தார். ஆனால், அந்த வீடியோவில் அப்படியான காட்சிகள் இடம்பெறவில்லை.
இது சமூகவலைதளத்தில் வேகமாக பரவியதால் தீபக்கை பலர் வசைபாடினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமூகவலைதளத்தில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக ஷிம்ஜிதா முஸ்தபா பொய் வீடியோ வெளியிட்டுள்ளதாக பலர் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷிம்ஜிதாவை நேற்று கைது செய்தனர்.
