ADDED : ஜூன் 05, 2025 01:02 AM

பாலக்காடு; எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்த பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீஷாவை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சொரனூர் குளப்புள்ளி கணயம்திருத்தி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஷா.
நடன கலைஞரான இவர், பெங்களூருவில் தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றுகிறார். பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டமும் படிக்கிறார். இவரின் கணவர் ஜெயராம், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக உள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீஷா, லடாக்கில் உள்ள ஸ்டாக் காங்ரி, இமாலய பிரதேசத்தில் உள்ள திரிம்டு உட்பட 15க்கும் மேற்பட்ட மலை சிகரங்கள் கடந்து, சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். இவரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஸ்ரீஷா கூறியதாவது:
கடல் மட்டத்திலிருந்து, 8,848 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த, கேரளாவின் இரண்டாவது பெண் ஆவேன். முதலில் இதை சாதித்தவர் கண்ணூர் மாநிலம் வேங்கோடு பகுதி சேர்ந்த சப்ரினா ஆவார். அவர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவுடன், நானும் மலை ஏற துங்கினேன். குழுவில் உள்ள வட இந்தியாவை சேர்ந்த மூவர் இச்சாதனையை படைத்துள்ளனர். மீதி உள்ள மூன்று பேர் உடல்நல பிரச்னைகள் காரணமாக திரும்பினர்.
கடும் பனி மற்றும் காற்று வீசும் நேரங்களில், மலை ஏற மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. மே 12ம் தேதி நேபாளத்தில் உள்ள அடிப்படை முகாமில் இருந்து, மலை பயணம் தொடங்கினேன். முதலில், நேபாளத்தில் உள்ள ஆறாயிரம் அடிக்கு மேல் உயரமுள்ள லோபுச்சே மலை ஏறினேன்.
தொடர்ந்து சில நாட்கள் ஓய்வெடுத்தேன். அதன்பின், எவரெஸ்டின் அடிவாரத்தில் இருந்து, ஏழாயிரம் மீட்டர் உயரமுள்ள மூன்றாவது முகாமு-க்கு ஏறினோம்.
பிறகு மீண்டும் கீழே உள்ள முதல் முகாமுக்கு வந்தோம். தொடர்ந்து 12 மணி நேரம் என்ற குறுகிய நேர பயணத்தில், மே 20ம் தேதி காலை 10:30 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதித்தோம்.
இவ்வாறு, கூறினார்.

