ADDED : ஜூலை 28, 2025 12:08 AM
புதுடில்லி: பஞ்சாபில் போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீசி, மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
பஞ்சாபின் படாலாவில் உள்ள கிலா லாச் சிங் போலீஸ் ஸ்டேஷன் மீது, கடந்த ஏப்., 7ல் கையெறி குண்டு வீசப்பட்டது.
இதில், மற்றொரு குண்டுவீச்சு வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் பாபர் கல்சா சர்வதேச பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷன் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த விவகாரத்தில், தொடர்புடைய ஆகாஷ்தீப் என்பவரை டில்லி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்படி, குண்டுவீச்சில் தொடர்புடைய அமிர்தசரசை சேர்ந்த கரண்வீர் என்பவர் டில்லியில் உலவுவது தெரியவந்தது. இதையடுத்து நடந்த சோதனையில், டில்லியில் ஆயுதங்களை விற்க முயன்ற கரண்வீரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், வெளிநாட்டில் இயங்கும் பாபர் கல்சா பயங்கரவாத அமைப்பிடம் இருந்து வந்த தகவலின் அடிப்படையிலேயே, பஞ்சாப் போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டுவீச்சு நடத்தியது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், கரண்வீரின் சகோதரர் குர்சேவாக்கை மத்திய புலனாய்வு அமைப்பினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே, மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

