ஓட்டு இயந்திரம் வேண்டாம்; சீட்டுதான் வேணும் என்கிறார் கார்கே!
ஓட்டு இயந்திரம் வேண்டாம்; சீட்டுதான் வேணும் என்கிறார் கார்கே!
ADDED : நவ 26, 2024 08:13 PM

புதுடில்லி: மின்னணு ஓட்டு இயந்திரங்களுக்கு (இ.வி.எம்) பதிலாக மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
டில்லியில் இன்று அரசியல் அமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கார்கே மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது:
நான் இ.வி.எம்., குறித்து பல்வேறு பொதுநிகழ்ச்சிகளில் பலமுறை கூறியுள்ளேன். சமீபத்தில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், மின்னணு ஓட்டு இயந்திரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அதில் மேற்கு நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட இ.வி.எம்., பயன்படுத்தவில்லை என்றார்.
பா.ஜ., மக்களை பிளவுபடுத்தும் கொள்கைகளை சொல்லி வருகிறது. ஆனால் நாட்டிற்கு உண்மையிலேயே ஒருங்கிணைப்புதான் தேவை. ராகுல், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க ஒற்றுமை பயணம் மேற்கொண்டார்.
அதில் நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களும் அவருடன் இணைந்தனர். அரசியல் அமைப்பு எளிதாக உருவாக்கப்பட்டது அல்ல. காங்கிரஸ் கட்சி அதற்கு கடுமையாக பணியாற்றி உள்ளது. அரசியல் அமைப்பில் அம்பேத்கருக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, மைனாரிட்டி அரசு. பிரதமர் ஒரு காலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உதவியுடனும், மற்றொரு காலில் பீஹாரின் நிதிஷ்குமார் உதவியுடனும் பயன்படுத்தி நடக்கிறார்.
இவ்வாறு கார்கே பேசினார்.
மின்னணு ஓட்டு இயந்திரத்துக்கு பதில், ஓட்டுச்சீட்டு முறை கொண்டு வர வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை, இன்று காலை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.