பிரதமரை புகழ்ந்த விவகாரம்; கார்கே - தரூர் வார்த்தை போர்
பிரதமரை புகழ்ந்த விவகாரம்; கார்கே - தரூர் வார்த்தை போர்
ADDED : ஜூன் 26, 2025 01:30 AM

புதுடில்லி : ''நம் நாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சி கொள்கை. ஆனால், சிலர் 'முதலில் மோடி, அதன்பின் தான் நாடு' என்ற மனநிலையில் உள்ளனர்,'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தன் கட்சி எம்.பி., சசி தரூரை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்திய படையினர் நடத்திய 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றி உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்றன.
இதில் ஒரு குழுவுக்கு காங்., மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்.பி.,யுமான சசி தரூர் தலைமை வகித்தார். கட்சியின் எதிர்ப்பை மீறி தரூர் சென்றதாக காங்., குற்றஞ்சாட்டியது.
இப்பயணத்திற்கு பின் பிரதமர் மோடியை புகழ்ந்து, ஆங்கில நாளிதழில் தரூர் கட்டுரை எழுதினார். இது, காங்கிரஸ் நிர்வாகிகளை எரிச்சலாக்கியது.
இந்நிலையில் டில்லியில் உள்ள காங்., தலைமையகத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சசி தரூர் எழுதிய கட்டுரை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக படிக்கத் தெரியாது. அவரது ஆங்கிலப் புலமை மிகச் சிறப்பானது. அதனால்தான் அவரை காங்., செயற்குழு உறுப்பினராக நியமித்தோம்.
எதிர்க்கட்சியினர் அனைவரும் ஆப்பரேஷன் சிந்துாரில் ராணுவத்தின் பக்கம் இருக்கின்றனர்.
'நாடு தான் முக்கியம்; அதன்பின் தான் கட்சி' என்பதே எங்கள் கொள்கை. ஆனால், சிலரோ 'முதலில் மோடி, அதன்பின் தான் நாடு' என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
தரூர் பதிலடி
இதற்கு பதிலடி தரும் வகையில், சிறிதுநேரத்தில் சமூக வலைதளத்தில் சசி தரூர், ஒரு பறவையின் படத்தை பதிவிட்டார். அதில், 'பறக்க அனுமதி கேட்காதீர்கள்; சிறகுகள் உங்களுடையது. வானம், யாருக்கும் சொந்தமில்லை' என, குறிப்பிட்டிருந்தார்.