கலபுரகியில் கார்கே மருமகன் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 'ஓகே'
கலபுரகியில் கார்கே மருமகன் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 'ஓகே'
ADDED : பிப் 22, 2024 11:13 PM
பெங்களூரு: 'கலபுரகி லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடாவிட்டால், அவரது மருமகன் போட்டியிடுவதில் ஆட்சேபனை இல்லை' என எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு, கர்நாடக காங்கிரஸ் விறுவிறுப்பாக தயாராகிறது. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பல கட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்த தேர்தலில் பா.ஜ.,விடம் பறிகொடுத்த தொகுதிகளை, மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது. இவற்றில் கலபுரகியும் ஒன்றாகும். இம்முறை மல்லிகார்ஜுன கார்கே, போட்டியிடுவார் என, தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் கட்சியின் தேசிய தலைவராக இருப்பதால், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.
வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும். இவர் கலபுரகியில் மட்டுமே, அமர்ந்திருக்க முடியாது. எனவே தன்னால் போட்டியிட முடியாது என, கார்கே மறுத்துள்ளார். இவரது மகனும், அமைச்சருமான பிரியங்க் கார்கேவை களமிறக்க, காங்கிரஸ் திட்டமிட்டது. அவரும் போட்டியிட ஆர்வம் காண்பிக்கவில்லை. கார்கேவின் மருமகன் ராதா கிருஷ்ணாவுக்கு சீட் அளிக்கும்படி, தொண்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கலபுரகி வேட்பாளர் தேர்வு குறித்து, பெங்களூரின் தனியார் ஹோட்டலில் அமைச்சர்கள் பிரியங்க் கார்கே, சரண பிரகாஷ் பாட்டீல் தலைமையில், நேற்று முன்தினம் இரவு, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில் கார்கே களமிறங்காவிட்டால், அவரது மருமகன் ராதா கிருஷ்ணாவுக்கு சீட் தருவதில் ஆட்சேபனை இல்லையென, எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.
வேட்பாளர் தேர்வு குறித்து, இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை, காங்., மேலிடத்திடம் விட்டுவிட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.