சிறுமியரை கடத்தி பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
சிறுமியரை கடத்தி பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ADDED : அக் 01, 2025 03:27 AM
பஹ்ரைச்: உத்தர பிரதேசத்தில், 6 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தொடர் பலாத்கார குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம் சுஜாலி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த ஜூன் 15ல் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த போது காணாமல் போனார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இறுதியில் கிராமத்துக்கு வெளியே உள்ள கரும்பு தோட்டத்தில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். சிறுமியின் தந்தை போலீசில் அளித்த புகாரின்படி மர்மநபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது சிறுமியின் தந்தை, தன் மகளை போல் 5 முதல் 8 வயதுக்கு உட்பட்ட மேலும் மூன்று சிறுமியர், கடந்த ஜூன் 25, 28 மற்றும் ஜூலை 3ல் மாயமாகி, பின், பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மற்ற சிறுமியரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரையும் கடத்திச் சென்றவர் ஒரே நபர் என்றும், அவரது கையில் பச்சை குத்தியிருப்பதும் தெரியவந்தது.
மேலும் சிறுமியரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர், சிறுமியருக்கு மிட்டாய், உணவு அல்லது புது உடைகள் வாங்கி தந்ததும் தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த அவினாஷ் பான்டே, 30, என்பவரை பிடித்து அவரது மொபைல் போனை சோதனையிட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட சிறுமியரின் புகைப்படங்கள் இருந்தன. இதன்படி அவினாஷை கைது செய்து விசாரித்தனர்.
பஹ்ரைசில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில், அவினாஷுக்கு ஆயுள் தண்டனையும், 1.60 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னதாக அவினாஷ் மீதான மற்றொரு பலாத்கார வழக்கை விசாரித்த நீதிபதி, செப்., 24ல் அதே நபருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் இரு வழக்குகளில், அவினாஷ் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.