ADDED : பிப் 03, 2024 11:11 PM
கதக்: 'லவ் ஜிகாத்' செய்வதற்காக கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என, இளம்பெண் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
கதக் பெட்டகேரியில் வசித்தவர் அமீர் குகனுார், 30. இவருக்கு திருமணமாகிவிட்டது. ஒரு குழந்தை உள்ளது. அமீரும், பக்கத்து வீட்டில் வசிக்கும் வேறு மதத்தை சேர்ந்த தம்பதியின் 19 வயது இளம்பெண்ணும் காதலித்தனர். கடந்த மாதம் 16ம் தேதி இருவரும் ஓட்டம் பிடித்தனர்.
'லவ் ஜிகாத்' செய்வதற்காக மகளை கடத்தியதாக, இளம்பெண் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
பெலகாவியில் அமீருடன் வசித்து வந்த இளம்பெண்ணை, நேற்று முன்தினம் போலீசார் மீட்டனர். அவரை கதக் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் அளிக்கையில், ''நானும், அமீரும் காதலிக்கிறோம். அவருக்கு திருமணம் ஆனது தெரிந்து தான் காதலித்தேன். நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்யவில்லை. பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை. காதலனுடன் இப்போது செல்ல மாட்டேன். அடுத்த முடிவு எடுக்க 15 நாள் தேவைப்படுகிறது. என்னை 'லவ் ஜிகாத்' செய்ய, அமீர் முயற்சி செய்யவில்லை,'' என்றார்.
இதையடுத்து இளம்பெண்ணை, பெண்கள் காப்பகத்தில் போலீசார் தங்க வைத்தனர்.