ADDED : அக் 03, 2024 07:52 PM
ஹவுஸ் காஸி: தகாத உறவைத் தொடர மறுத்த ஆத்திரத்தில் வேலைக்காரப் பெண்ணை கொலை செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தெற்கு டில்லியின் ஹவுஸ் காஸி, பஞ்சசீல் பூங்கா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தன் வீட்டில் வேலை செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 50 வயது பெண் திடீரென மாயமாகி விட்டார். 33 ஆண்டுகளாக தன் வீட்டில் பணியாற்றிய அவர், பணத்துடன் ஓடிச் சென்றுள்ளார் என, போலீசில் புகார் அளித்தார்.
மாயமான பெண்ணின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. புகார்தாரர் வீட்டில் இருந்து போலீசார் விசாரணையை துவக்கினர். இதில் அவரது வீட்டில் பகுதிநேரமாக வேலை செய்த டிரைவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.
சம்பவ தினத்தன்று புகார்தாரரின் அத்தையை கிளப்புக்கு அழைத்துச் சென்ற அவர், திரும்ப வரவே இல்லை. இதையடுத்து டிரைவர் ஜிதேந்தர் என்ற கோல்டியை, 50, தேடினர். அவரை பிடித்து விசாரித்தபோது, வேலைக்காரப் பெண்ணை கொலை செய்து, சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி நொய்டாவில் வீசியது தெரிய வந்தது.
வேலைக்காரப் பெண்ணுக்கும் ஜிதேந்தருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்த உறவை தொடர வேலைக்காரப் பெண் மறுத்ததால் அவரை தன் கூட்டாளியுடன் சேர்ந்து அந்த பெண்ணை கழுத்து நெரித்து ஜிதேந்தர் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
கைவிடப்பட்ட வயலில் இருந்த சாக்குமூட்டையை போலீசார் கைப்பற்றினர். பெண் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஜிதேந்தர் கூட்டாளியை வலைவீசி போலீசார் தேடி வருகின்றனர்.

