வங்கதேச போராட்டத்தில் படுகொலைகள்; மனித இனத்திற்கு எதிரான குற்றம்: ஐ.நா.,
வங்கதேச போராட்டத்தில் படுகொலைகள்; மனித இனத்திற்கு எதிரான குற்றம்: ஐ.நா.,
ADDED : பிப் 13, 2025 01:06 AM
நியூயார்க்: 'வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு பாதுகாப்புப் படையினர் வாயிலாக 1,400க்கும் மேற்பட்டோரை சுட்டுக்கொன்றதாகவும், இது மனித இனத்திற்கு எதிரான குற்றச்செயல்' என, ஐ.நா., அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அந்நாட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது.
இதையடுத்து, பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
விசாரணை
தற்போது, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி செய்கிறது.
இந்நிலையில், மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக ஐ.நா., அமைப்பின் மனித உரிமைகள் பிரிவு, வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் அமைப்பினர் உள்ளிட்ட 230க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு, சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
இதில் குறிப்பிட்டுள்ளதாவது:
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினாவுக்கு எதிராக, கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்டில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில், 13 சதவீதம் பேர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.
இது, தன் ஆட்சி மற்றும் அதிகாரத்தை தற்காத்து கொள்ளும் நோக்கில் போராட்டம் நடத்திய மாணவர்கள், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து வங்கதேச பாதுகாப்பு படையினர் உதவியுடன் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு அரங்கேற்றிய கொடூர தாக்குதல் என கண்டறியப்பட்டுள்ளது.
கொடுமை
இதேபோல் போராட்டத்தில் பங்கேற்ற பல பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியதும் தெரியவந்துள்ளது.
இதுதவிர, ஏராளமான குழந்தைகளையும் மனிதாபிமானமற்ற முறையில் காவலில் அடைத்து பல்வேறு கொடுமைகளையும் அரங்கேற்றி உள்ளனர். இது, மனித இனத்திற்கு எதிரான குற்றச்செயலாக கருதுகிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.