மேவார் அரச குடும்ப தகராறு கோவிலில் வழிபட்டார் மன்னர்
மேவார் அரச குடும்ப தகராறு கோவிலில் வழிபட்டார் மன்னர்
ADDED : நவ 28, 2024 12:51 AM

ஜெய்ப்பூர்,ராஜஸ்தானின் உதய்ப்பூர் அரச குடும்பத்தினருக்கு இடையே சொத்து பிரச்னை எழுந்துள்ள நிலையில், அரண்மனை வளாகத்திற்குள் உள்ள ஏகலிங்க சிவன் கோவிலில் மேவார் அரச குடும்பத்தின் வாரிசு நேற்று வழிபட்டார்.
ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள மேவார் அரச குடும்பத்தின் மன்னராக இருந்தவர் மகேந்திர சிங் மேவார். இவர், கடந்த 10ம் தேதி காலமானார்.
இதை தொடர்ந்து, இவரது வாரிசான விஸ்வராஜ் சிங், புதிய மன்னராக சமீபத்தில் பதவி ஏற்றார். இவர், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்து வருகிறார்.
அரச குடும்பத்தின் வழக்கப்படி, உதய்ப்பூர் நகர அரண்மனை வளாகத்திற்குள் உள்ள அவர்களின் குடும்ப கோவில்களான துனி மாதா கோவில் மற்றும் ஏகலிங்க சிவன் கோவிலுக்குள் சென்று வழிபட, தன் ஆதரவாளர்களுடன் விஸ்வராஜ் சிங் கடந்த 25ம் தேதி சென்றார்.
அந்த அரண்மனையும், அதன் உள்ளே உள்ள கோவில்களும், விஸ்வராஜ் சிங்கின் தந்தை வழி உறவினரான அரவிந்த் சிங் மேவார் கட்டுப்பாட்டில் உள்ளன.
இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு உள்ளது. இதனால், விஸ்வராஜ் சிங்கை அரண்மனை வளாகத்திற்குள் நுழைய அரவிந்த் சிங் அனுமதி மறுத்தார்.
இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு காண, தனி அதிகாரியையும் மாவட்ட நிர்வாகம் நியமித்தது.
இதற்கிடையே, அரவிந்த் சிங்கின் மகன் லஷ்சயராஜ் சிங் கூறுகையில், ''அரண்மனை வளாகத்தில் உள்ள ஏகலிங்க சிவன் கோவிலில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வழிபடலாம். அதற்கு முழு அனுமதி உள்ளது. ஆனால், எங்கள் குடும்ப கோவிலான துனி மாதா கோவிலுக்குள் சென்று வழிபட நினைத்தால், நீதிமன்றத்தில் முறையிடலாம்,'' என்றார்.
இதையடுத்து, பலத்த பாதுகாப்புக்கு இடையே விஸ்வராஜ் சிங் தன் குடும்பத்தினருடன் ஏகலிங்க சிவன் கோவிலுக்கு சென்று நேற்று வழிபட்டார். எனினும், மற்றொரு கோவிலுக்குள் சென்று வழிபடுவது குறித்து, இருதரப்பும் இடையே பேச்சு நடந்து வருகிறது.