பொதுத்துறை வங்கிகளில் குறையும் 'கிசான் கிரெடிட் கார்டு' கணக்குகள்
பொதுத்துறை வங்கிகளில் குறையும் 'கிசான் கிரெடிட் கார்டு' கணக்குகள்
ADDED : ஆக 04, 2025 11:59 PM

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகளில், 'கிசான் கிரெடிட் கார்டு' கணக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.8 சதவீதமாக குறைந்து, தற்போது 2.25 கோடி பேர் மட்டுமே வைத்துள்ளனர். எனினும், நிலுவை கடன் தொகை 2.2 சதவீதம் அதிகரித்து, 41,300 கோடி ரூபாயாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுதும் உள்ள விவசாயிகள் பயன் பெற, குறுகிய கால கடன்களை எளிதில் பெறும் வகையில், மத்திய அரசு சார்பில் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் 1998 முதல் நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகளில் துவங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அரசு மூத்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:
விவசாயிகளின் வருவாய் மேம்பட்டு வந்தாலும், இத்தொழிலில் இருந்து பலர் வெளியேறி வருகின்றனர்.
கூட்டுறவு வங்கிகள், வங்கியில்லா கடனுதவி அளிக்கும் தனியார் நிறுவனங்களையும் விவசாயிகள் நாடி வருகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளில் கிசான் கிரெடிட் கார்டு கணக்குகளின் எண்ணிக்கை குறைய இதுவும் ஒரு காரணம்.
முன்னதாக விவசாயிகளுக்கு பி.எம்., கிசான் அல்லது வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் குறிப்பிட்ட கடன்கள் வழங்கப்படுகின்றன.
இதன் காரணமாக, கிசான் கிரெடிட் கார்டு கணக்குகளை பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர, வங்கிகளில் தொழில்நுட்ப கோளாறு, முழுமையடையாத 'டிஜிட்டல்' ஆவணங்கள் போன்றவற்றால் கார்டு புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், பல கணக்குகள் மூடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிர் கடன்களை பெற முக்கிய ஆதாரமாக உள்ள கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை ஊக்குவிக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் வரம்பை 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதுடன், நிலுவையில் உள்ள கடன் தொகைகளை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதை ஊக்குவிக்க, விவசாயிகளுக்கு 3 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.