முஸ்லிம்களுக்கு முத்தம்... எங்களுக்கு தடியடியா! எதிர்க்கட்சி தலைவர் அரவிந்த் பெல்லத் பாய்ச்சல்
முஸ்லிம்களுக்கு முத்தம்... எங்களுக்கு தடியடியா! எதிர்க்கட்சி தலைவர் அரவிந்த் பெல்லத் பாய்ச்சல்
ADDED : டிச 14, 2024 11:15 PM

''பொய் சொல்வதில், முதல்வர் சித்தராமையா நிபுணர். இட ஒதுக்கீடு அளிப்பது எப்படி அரசியல் அமைப்புக்கு எதிரானதாகும்?'' என, மாநில எதிர்க்கட்சி துணைத்தலைவர் அரவிந்த் பெல்லத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, ஹூப்பள்ளியில் அவர் நேற்று அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா, முஸ்லிம்கள் என்றால் முத்தம் கொடுப்பார். எங்களுக்கு தடியடியா? அவருக்கு முஸ்லிம்கள் மீது அதிக அன்பு. அனைவரின் இட ஒதுக்கீட்டையும், அவர்களுக்கே வழங்க முற்பட்டுள்ளார்.
ஹூப்பள்ளியில் போலீஸ் நிலையத்துக்கு தீவைத்தவர்களுக்கும், டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளியில் கலவரம் ஏற்படுத்தியவர்களுக்கும், குக்கர் குண்டு வைத்தவர்களுக்கும் முத்தம் கொடுப்பார். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய, எங்கள் மீது தடியடி நடத்தினார்.
பொய் சொல்வதில், முதல்வர் சித்தராமையா நிபுணர். இட ஒதுக்கீடு அளிப்பது எப்படி அரசியல் அமைப்புக்கு எதிரானதாகும்? இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள், மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என, கூறட்டும். அரசியல் அமைப்புக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்துள்ளார்.
முதல்வரை பொருத்தவரை, முஸ்லிம்களை தவிர, வேறு யாருக்கும் எதையும் கொடுக்கவில்லை. காங்கிரஸ் அரசு எங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. பஞ்சமசாலி சமுதாயத்தினர் மீது தடியடி நடந்ததற்கு, முதல்வரே பொறுப்பு.
ஹிந்து சமுதாயத்தினரும் இவருக்கு ஓட்டுப்போட்டனர் என்பதை, மறந்துவிடக்கூடாது. இவருக்கு முஸ்லிம் சமுதாயத்தினர் மீது மட்டுமே அக்கறை உள்ளது. அனைத்து பணத்தையும், அவர்களுக்கு கொடுத்தால் எப்படி? மதம் அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை என, அம்பேத்கர் வகுத்த அரசியல் அமைப்பு கூறுகிறது. கல்வி மற்றும் சமூக அடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளது.
பிரிவு '2ஏ'வில், 18 சதவீதம் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார். பிரிவு 1ல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்துள்ளார். இவர்களுக்கே கொடுத்தால், மற்றவர்கள் என்ன செய்வது?
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.