2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுல் அதிரடி சதம்: நியூசிலாந்து அணிக்கு 285 ரன் இலக்கு
2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுல் அதிரடி சதம்: நியூசிலாந்து அணிக்கு 285 ரன் இலக்கு
UPDATED : ஜன 14, 2026 05:26 PM
ADDED : ஜன 14, 2026 05:23 PM

ராஜ்கோட்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 284 ரன் எடுத்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு 285 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.
கடந்த போட்டியில் விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் இந்தத் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல, நியூசிலாந்து அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பின்னர் ஆதித்ய அசோக்கிற்கு பதிலாக ஜேடென் லினாக்ஸ் அணியில் அறிமுகமானார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா, கேப்டன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆரம்பத்தில் இருவரும் ரன் குவிக்க சிரமப்பட்டனர். அதன்பிறகு, பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை விளாசினர். 24 ரன்னில் ரோகித் சர்மா ஆட்டமிழந்து இந்தப் போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார். கில் அரைசதம் அடித்து 56 ரன்களில் அவுட் ஆனார்.
அதைதொடர்ந்து வந்த விராத் கோலி 2 பவுண்டரிகளுடன் 23 ரன்களில் அவுட் ஆனார். ஸ்ரேயஸ் சோபிக்காமல் 8 ரன்களில் வெளியேறினார்.
கே.எல். ராகுல் அதிரடி சதம்:
அடுத்து வந்த கே.எல். ராகுல் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடினார். ரவீந்திர ஜடேஜா 27 ரன்களும், நிதிஷ் குமார் ரெட்டி 20 ரன்களிலும், ஹர்ஷித் ரானா 2 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். கே.எல். ராகுல், 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் ஆட்டமிழக்காமல் 112 ரன் எடுத்தார்.நியூசிலாந்து அணியின் தரப்பில் கிரிஸ்டன் கிளார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

