sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடும்ப பிரச்னைகளை போக்கும் கோடி லிங்கேஸ்வரா

/

குடும்ப பிரச்னைகளை போக்கும் கோடி லிங்கேஸ்வரா

குடும்ப பிரச்னைகளை போக்கும் கோடி லிங்கேஸ்வரா

குடும்ப பிரச்னைகளை போக்கும் கோடி லிங்கேஸ்வரா


ADDED : டிச 17, 2024 04:51 AM

Google News

ADDED : டிச 17, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடும்பத்தில் பிரச்னையை தாங்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா. இதில் இருந்து விடுபட வழி தெரியாமல் திணறுகிறீர்களா. அப்படி என்றால் உடனடியாக கோடி லிங்கேஸ்வரரை தரிசனம் செய்து முறையிடுங்கள்.

கர்நாடகாவில் கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு விதமான பாரம்பரியம், சிறப்பு சக்திகள், ஐதீகம் உள்ளது.

கோலார் தங்கவயலின் கம்மசந்திராவில் கோடி லிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. 108 அடி உயரமான லிங்கம் உள்ளது. 35 அடி உயர நந்தீஸ்வரர் உட்பட வெவ்வேறு வடிவங்களில் லட்சக்கணக்கான சிவலிங்கங்கள் இருப்பது கோவிலின் சிறப்பாகும்.

பிரார்த்தனை


பக்தர்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறினால் லிங்கம் பிரதிஷ்டை செய்வதாக பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறினால், லிங்கம் பிரதிஷ்டை செய்கின்றனர்.

கவுதம முனிவரின் சாபத்துக்கு ஆளான இந்திரன், இங்கு சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றாக ஐதீகம். சிவலிங்கம் வடிவிலேயே கோவில் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் விரும்பினால் தங்களின் பெயரில் ஒரு அடி முதல் மூன்று அடி வரையிலான லிங்கத்தை பிரதிஷ்டை செய்யலாம். இது போன்று பக்தர்கள் பிரதிஷ்டை செய்த லட்சக்கணக்கான லிங்கங்களை கோவிலில் காணலாம்.

இந்த கோவிலை, பெமல் தொழிலாளியாக இருந்த சாம்பசிவமூர்த்தி, முதலில் 108 அடி உயரமான சிவலிங்கம் அமைத்தார்.

அதன் பின் ஐந்து சிவலிங்கம், 101 சிவலிங்கம், அதன்பின் 1,008 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோவிலில் ஒரு கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது, அவரது கனவாகும். ஆனால் அந்த கனவு நிறைவேறும் முன் அவர் காலமானார். அவர் காலமான பின்னரும், இங்கு சிவலிங்கங்கள், உயரமான நந்தி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

11 கோவில்கள்


கோடி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் பிரம்மா, விஷ்ணு, அன்னபூர்னேஸ்வரி தேவி, வெங்கடரமண சுவாமி, பாண்டுரங்க சுவாமி, பஞ்சமுக கணபதி, ராமர், லட்சுமணர், சீதை அய்யப்பன், நவக்கிரகங்கள் உட்பட 11 சன்னிதிகள் உள்ளன.

கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவலிங்கங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இங்கு, கர்நாடக முதல்வர்கள் அனைவரும் தலா ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து உள்ளனர். ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ், சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் ரஜினி, விஜயகாந்த், விஜய் உட்பட பலர் பெயர்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சரத்குமார், நேரடியாக வந்து லிங்கம் பிரதிஷ்டை செய்து உள்ளார்.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. சிவராத்திரி நாளில் பக்தர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்தை தாண்டுகிறது. அன்றைய தினம் சிவனை தரிசனம் செய்தால், கோடி புண்ணியம் என்பது ஐதீகம். எனவே வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

நம்பிக்கை


குடும்ப பிரச்னைகளில் சிக்கி தவிப்போர், இங்கு வந்து சிவனை தரிசித்தால், கஷ்டங்கள் பஞ்சாய் பறந்தோடும். நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். 20 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கேமரா கொண்டு செல்ல 100 ரூபாய், பார்க்கிங்குக்கு, 30 ரூபாய் கட்டணம். சிவலிங்கம் பிரதிஷ்டை சேவை 6,000 ரூபாயில் இருந்து துவங்குகிறது.

கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு ஓய்வறை உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கூட்டு திருமணங்கள் நடக்கின்றன.

தினமும் கோவிலில் மங்கள வாத்தியங்களுடன், வேத கோஷங்கள் முழங்க சிவனுக்கு பூஜை நடப்பதை காண, கண் கோடி வேண்டும்.

அமைதியான சூழலில் கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் மன அமைதிக்காக தியானம் செய்ய, தியான மண்டபமும் உள்ளது.

எப்படி செல்வது?

பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 80 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோவிலுக்கு கோலார், பங்கார்பேட்டை, தங்கவயல் ஆலமரம், பெமல் ஹெச்.பி., டிவிஷன், கிருஷ்ணாபுரம் வழியாக செல்லலாம். பெங்களூரு கே.எஸ்.ஆர்., சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து பங்கார்பேட்டை வழியாக கோரமண்டல் ரயில் நிலையத்தில் வந்திறங்க வேண்டும். அங்குள்ள ஸ்கூல் ஆப் மைன்ஸ் பகுதியில் இருந்து கோடி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு, பஸ் மூலம் செல்லலாம்.பெங்களுரு சிட்டியில் இருந்து 100 கி.மீ., துாரத்தில் உள்ள தங்கவயல் ராபர்ட்சன்பேட்டைக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னையில் இருந்து பஸ்கள் மார்க்கமாக முல்பாகல், பேத்தமங்களா வழியாகவும்; ஆந்திர மாநிலம், வி.கோட்டா மற்றும் குப்பம் பகுதியினர் பஸ்கள் மூலம் பேத்தமங்களா வழியாக கோவிலுக்கு செல்லலாம்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us