கோகாக், சிக்கோடி புதிய மாவட்டங்கள்? பெலகாவியை மூன்றாக பிரிக்க திட்டம்!
கோகாக், சிக்கோடி புதிய மாவட்டங்கள்? பெலகாவியை மூன்றாக பிரிக்க திட்டம்!
ADDED : பிப் 15, 2024 04:39 AM
பெலகாவி : லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பெலகாவி மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, கோகாக், சிக்கோடி புதிய மாவட்டங்களாக உதயமாக வாய்ப்புள்ளது. இது குறித்து, நாளைய பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு, கர்நாடக காங்கிரஸ் தயாராகி வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது.
குறிப்பாக பெலகாவியின் இரண்டு தொகுதிகளின் மீது, பார்வையை பதித்துள்ளது. தற்போது பெலகாவி மாவட்டத்தின், இரண்டு லோக்சபா தொகுதிகளும் பா.ஜ., வசம் உள்ளன. இதை தட்டி பறிக்க வேண்டும் என, காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது.
பெரிய மாவட்டமாக இருந்த பல்லாரியை பிரித்து, விஜயநகரா மாவட்டத்தை முந்தைய பா.ஜ., அரசு அறிவித்திருந்தது. கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவி.
நிர்வாக வசதிக்காக மூன்றாக பிரிக்க வேண்டும் என, பெலகாவி பகுதியின் வெவ்வேறு அமைப்புகள், சங்கங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கின்றன.
கடந்த 1997ல், அன்றைய முதல்வர் ஜெ.எச்.படேல், பெலகாவியை பிரித்து, சிக்கோடி, கோகாக் தாலுகாக்களை மாவட்டங்களாக அறிவிக்க முடிவு செய்தார். ஆனால் கன்னட அமைப்பினரின் நெருக்கடியால், அந்த முடிவை கை விட்டார்.
இந்நிலையில், பெலகாவியை மூன்றாக பிரித்து, கோகாக், சிக்கோடியை புதிய மாவட்டங்களாக அறிவிக்க அரசு தயாராகிறது.
முதல்வர் சித்தராமையா, 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நாளை தாக்கல் செய்கிறார். இதில் கோகாக், சிக்கோடி புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

