கேட்டீங்களா இந்த அநியாயத்தை; எங்களுக்கே லஞ்சம் தர முயற்சி; கோல்கட்டா பெண் டாக்டர் குடும்பம் பகீர்!
கேட்டீங்களா இந்த அநியாயத்தை; எங்களுக்கே லஞ்சம் தர முயற்சி; கோல்கட்டா பெண் டாக்டர் குடும்பம் பகீர்!
UPDATED : செப் 05, 2024 11:16 AM
ADDED : செப் 05, 2024 11:04 AM

கோல்கட்டா: கோல்கட்டா மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் குடும்பத்தினர், 'லஞ்சம் கொடுத்து வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்தனர்' என போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இன்று வரை மேற்கு வங்கத்தில் இது தொடர்பான கொந்தளிப்பு அடங்கவில்லை.
இந்நிலையில்,லஞ்சம் கொடுத்து வழக்கை போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்தனர் என பெண் டாக்டர் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அவர்கள் கூறியதாவது: உடலை அவசரமாக தகனம் செய்ய வலியுறுத்தினர். லஞ்சம் கொடுத்து வழக்கை போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்தனர். போலீஸ் அதிகாரியிடம் இருந்து லஞ்சம் வாங்க மறுத்துவிட்டோம்.
எதற்கெடுத்தாலும் லஞ்சமா?
வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் ஆரம்பத்திலிருந்தே விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். உடலை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. உடலை பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டபோது போலீஸ் ஸ்டேஷனில் காத்திருக்க வைத்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு, மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், செவிசாய்க்கவில்லை என மருத்துவ மாணவர்கள் நிர்வாகம் மீது குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.