பெண் டாக்டர் பிரச்னை அவ்வளவு தானா; முதல்வர் மம்தாவுக்கு வலுக்குது எதிர்ப்பு
பெண் டாக்டர் பிரச்னை அவ்வளவு தானா; முதல்வர் மம்தாவுக்கு வலுக்குது எதிர்ப்பு
ADDED : செப் 10, 2024 02:05 PM

புதுடில்லி: துர்கா பூஜை கொண்டாட்டங்களில் கவனம் செலுத்துமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளது, பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு இன்னும் அடங்கவில்லை.
இந்நிலையில், மம்தா பானர்ஜி, பொதுமக்கள் தங்கள் கவனத்தை போராட்டங்களில் இருந்து துர்கா பூஜை விழாக்களுக்கு மாற்ற வேண்டும். சி.பி.ஐ., விசாரணையை விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியது விவாதத்தை கிளப்பி உள்ளது. இதற்கு, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டர் தாயாரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது.
விளக்கு அணைந்து விட்டது!
'துர்கா பூஜை அல்லது வேறு எந்த பண்டிகையையும் நாங்கள் ஒருபோதும் கொண்டாட மாட்டோம். அவரது கருத்துகள் உணர்ச்சியற்றவை. அவர் எங்கள் மகளைத் திருப்பித் தரட்டும். அவர் குடும்பத்தில் இது நடந்திருந்தால் அவர் இதையே சொல்லியிருப்பாங்களா?
என் வீட்டில் விளக்கு என்றென்றும் அணைந்து விட்டது. அவர்கள் என் மகளை தூக்கி எறிந்தார்கள். எனது மகளுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் ஒடுக்க முயற்சிக்கின்றனர் என பயிற்சி பெண் டாக்டர் தாயார் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
இழப்பீடு
மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பொதுமக்களை உங்கள் கைப்பாவையாகக் கருதுகிறீர்களா? டாக்டரின் குடும்பத்திற்கு இழப்பீடு குறித்து மம்தா பொய் கூறுகிறார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

