முதல்வர் மம்தாவை சந்திக்க டாக்டர்கள் முடிவு; முடிவுக்கு வருகிறதா 33 நாட்கள் நீடிக்கும் போராட்டம்?
முதல்வர் மம்தாவை சந்திக்க டாக்டர்கள் முடிவு; முடிவுக்கு வருகிறதா 33 நாட்கள் நீடிக்கும் போராட்டம்?
ADDED : செப் 11, 2024 04:36 PM

கோல்கட்டா: இளம்பெண் டாக்டர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடந்த ஆக.,9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரவு
இதனால், இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பயிற்சி பெண் டாக்டர் படுகொலை விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணையின்போது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 'போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜூனியர் டாக்டர்கள், தங்களின் போராட்டத்தைக் கைவிட்டு, 10ம் தேதி மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்' என நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
மேலும், பணிக்கு திரும்பும் டாக்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் மாநில அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. எனினும், சுப்ரீம் கோர்ட் கோரிக்கையை ஏற்காமல், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாக்டர்கள் சங்கத்தினர் கூறியிருந்தனர்.
இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டாக்டர்கள் சங்கத்தினருக்கு மேற்கு வங்க மாநில அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனை ஏற்க மறுத்த டாக்டர்கள், மாநில சுகாதாரச் செயலர், சுகாதாரக் கல்வி இயக்குனர் மற்றும் கோல்கட்டா போலீஸ் கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யக்கோரி ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்மதம்
சுகாதாரத்துறை அலுவலகமான ஸ்வஸ்திய பவனின் முன்பு 33வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க டாக்டர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால், விரைவில் டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.