கோல்கட்டா பெண் டாக்டர் கொலை: மருத்துவமனை மாஜி டீனுக்கு ஜாமின்
கோல்கட்டா பெண் டாக்டர் கொலை: மருத்துவமனை மாஜி டீனுக்கு ஜாமின்
ADDED : டிச 13, 2024 07:11 PM

கோல்கட்டா: மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் , மருத்துவமனை முன்னாள் டீன் உள்ளிட்ட சிலருக்கு கோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஆக., 9-ம் தேதி முதுநிலை இரண்டாம் ஆண்டு பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர வைத்தது.
சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர். கோல்கட்டா உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன், சந்தீப் கோஷ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் மருத்துவக்கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல் போலீஸ் அதிகாரி அபிஜித் மாண்டல் தாமதப்படுத்தியது மற்றும் தடயங்களை அழிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டனர்.
சீல்டாக் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் டீன் சந்தீப் கோஷ் மற்றும் போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர் ஜாமின் கோரிய மனுவை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் அவர்களுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

