கோல்கட்டா பயிற்சி டாக்டர் கொலை வழக்கு 'துாக்கிற்கு' மேல்முறையீடு செய்ய அனுமதி
கோல்கட்டா பயிற்சி டாக்டர் கொலை வழக்கு 'துாக்கிற்கு' மேல்முறையீடு செய்ய அனுமதி
ADDED : ஜன 22, 2025 01:42 AM
கோல்கட்டா,
கோல்கட்டாவில் பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை துாக்கு தண்டனையாக மாற்ற மேல்முறையீடு செய்யலாம் என, மேற்கு வங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கைது
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கடந்தாண்டு ஆகஸ்ட் 9ம் தேதி மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
நாடு முழுதும் போராட்டத்தை துாண்டிய இச்சம்பவத்தில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை, மாநில போலீஸ் விசாரணையில் இருந்து சி.பி.ஐ.,க்கு மாற்றியது.
சி.பி.ஐ., அதிகாரிகள், 162 நாட்களில் 120க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்தனர். அதன்பின் வழக்கு நடந்து வந்த சியால்தா கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
தண்டனை
அதன் அடிப்படையில் சஞ்சய் ராயை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு சாகும் வரை சிறையில் இருக்கும் வகையிலான ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கொல்லப்பட்ட பயிற்சி டாக்டரின் குடும்பத்தினருக்கு, மாநில அரசு 17 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பால் முதல்வர் மம்தா பானர்ஜி அதிருப்தி அடைந்தார்.
'மாநில போலீசார் வழக்கை நடத்தியிருந்தால் துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கும்' என அவர் கூறினார்.
இதை தொடர்ந்து, சியால்தா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மேற்கு வங்க அரசு சார்பில் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி தேபாங்சு பசக், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநில அரசுக்கு அனுமதி வழங்கினார்.