காங். - எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ம.ஜ.த. பிரமுகருக்கு மிரட்டல்
காங். - எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ம.ஜ.த. பிரமுகருக்கு மிரட்டல்
ADDED : ஜன 22, 2024 06:18 AM
சிக்கபல்லாப்பூர்; ம.ஜ.த., பிரமுகருக்கு, சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
சிக்கபல்லாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., பில்லப்பாவின் சிலையை, சிக்கபல்லாப்பூரில் நிறுவுவதாக கூறி இருந்தார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து சிக்கபல்லாப்பூர் ம.ஜ.த., பிரமுகர் அகில் ரெட்டி, சமூக வலைதளங்கள் மூலம், பிரதீப் ஈஸ்வருக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையடுத்து அகில் ரெட்டிக்கு, பிரதீப் ஈஸ்வரின் ஆதரவாளர்கள் மொபைல் போனில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், ஜாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிக்கபல்லாப்பூர் டவுன் போலீசில், அகில் ரெட்டி நேற்று புகார் அளித்து உள்ளார்.
இதன் பின்னர், வெளியான ம.ஜ.த., 'எக்ஸ்' வலைத்தள பதிவு:
சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் தொண்டர்கள், தெருவோர ரவுடிகள் போல நடந்து கொள்கின்றனர். எங்கள் கட்சியினருக்கு மிரட்டல் விடுக்கின்றனர். இதை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். சிக்கபல்லாப்பூர் தொகுதி, மக்களுக்கு சொந்தமானது. பிரதீப் ஈஸ்வருக்கு இல்லை.
வாக்குறுதியை நிறைவேற்றாதது குறித்து கேள்வி கேட்டால் தவறா. பிரதீப் ஈஸ்வர், உங்கள் ஆதரவாளர்களுக்கு புத்திமதி கூறுங்கள். அவர்களை நல்வழிக்கு கொண்டு வாருங்கள். நீங்கள் செய்யாவிட்டால், நாங்கள் செய்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.