sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கூடங்குளம் பிரச்னை: போராட்டக் குழுவினர் இன்று பிரதமருடன் சந்திப்பு

/

கூடங்குளம் பிரச்னை: போராட்டக் குழுவினர் இன்று பிரதமருடன் சந்திப்பு

கூடங்குளம் பிரச்னை: போராட்டக் குழுவினர் இன்று பிரதமருடன் சந்திப்பு

கூடங்குளம் பிரச்னை: போராட்டக் குழுவினர் இன்று பிரதமருடன் சந்திப்பு


ADDED : அக் 06, 2011 11:58 PM

Google News

ADDED : அக் 06, 2011 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னை தொடர்பாக, பன்னீர்செல்வம் தலைமையில் அரசியல் கட்சிகளின் குழுவினரும், போராட்டக் குழுவினரும், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து பேசுகின்றனர்.

கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, அந்த சுற்று வட்டாரப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அணு மின் நிலையத்தால் ஆபத்தும், சுற்றுச்சூழல் பாதிப்பும் இருக்கும் எனக் கூறி, தொடர் உண்ணாவிரதமும் இருந்தனர். மத்திய, மாநில அரசுகள் இவ்விஷயத்தில் தலையிட வலியுறுத்தும் அளவுக்கு அவர்களது போராட்டம் வலுவாக இருந்தது.

கூடங்குளம் உண்ணாவிரதப் பிரச்னை குறித்து உடனடியாக தலையிட்டு தீர்வு காணும்படி வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் சார்பில் கடிதமும் எழுதப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா தலையிட்டதன் பேரில், உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. பின்னர் இப்பிரச்னை சம்பந்தமாக நேரில் சந்தித்து முறையிடுவதற்கு நேரம் ஒதுக்கித் தரும்படி, முதல்வர் சார்பில் பிரதமருக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

இந்த வேண்டுகோளை ஏற்று, போராட்டக் குழுவினரைச் சந்திக்க பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார். அதன்படி கூடங்குளம் போராட்டக் குழுவினர், பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை இன்று வலியுறுத்தவுள்ளனர். இதற்காக டில்லிக்கு வந்திருக்கும் அவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளனர். போராட்டக் குழு சார்பில் அதன் தலைவர் உதயகுமாரன் தலைமையில் 13 பேர் வரை இடம் பெற்றுள்ளனர். இன்று மதியம் 12.30 மணியளவில் இவர்களுக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கியுள்ளது.

இது தவிர, தமிழகத்தின் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பின் போது பிரதமரை சந்திக்கவுள்ளனர். இதற்காக நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு குழுவும் வந்துள்ளது. இந்த குழுவில் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் தம்பிதுரை, மைத்ரேயன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன், பா.ஜ.,வைச் சேர்ந்த சரவணபெருமாள், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார், தமிழக அரசின் டில்லி பிரதிநிதி அசோகன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.,யான டி.ராஜா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

உதயகுமாரன் தலைமையில் வந்துள்ள 13 பேரும், அனைத்து கட்சிக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஏழு பேரும் சேர்ந்து மொத்தம் 20 பேர் கொண்ட குழுவாக ஒன்று சேர்ந்து தான், பிரதமரை இன்று சந்திக்கப் போகின்றனர். இதில், தற்போது எழுந்துள்ள சந்தேகம் என்னவெனில், போராட்டக் குழு வலியுறுத்தும் அதே கோரிக்கைகளை அனைத்து கட்சிக் குழுவும் வலியுறுத்தப் போகிறதா என்பது தான்.

காரணம், கூடங்குளம் அணு மின் நிலையத்தை இழுத்து மூடியே ஆக வேண்டுமென்பது தான் போராட்டக் குழுவின் ஒரு வரி கோரிக்கை. இந்த கோரிக்கையை வலுவாக அழுத்தம் கொடுத்து தான் அந்த போராட்டக் குழுவின் கோரிக்கை மனு அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றும் கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னையில் தனித்தனியே நிலைப்பாடுகள் உள்ளன.

கூடுதலும் குறைச்சலுமாக உள்ள அந்த நிலைப்பாடுகள் எல்லாம் தற்போது உதயகுமாரன் அளிக்கப்போகும் மனுவில் உள்ள, 'அணு மின் நிலையத்தை மூட வேண்டும்' என்ற கோரிக்கையோடு சேர்ந்து கலந்து விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், 'பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்ற அளவில் சில கட்சிகள் உள்ளன. மின் நிலையம் பாதுகாப்புடன் தான் உள்ளதென்பதை சுதந்திரமான அமைப்பை விட்டு ஆய்வு செய்து, அது அளிக்கும் சான்றிதழை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சில கட்சிகள் கூறியுள்ளன. ஆனால், போராட்டக் குழுவின் ஒரே கோரிக்கை மின் நிலையத்தை மூட வேண்டும் என்பது மட்டும் தான்.

நாளை(இன்று) பிரதமரை பார்க்கும்போது இரு தரப்புமே ஒன்றாக இணைந்து தான் சந்திக்கவுள்ளன. அனைத்து கட்சிக் குழுவுக்கு தலைமை ஏற்கும் அமைச்சர் பன்னீர்செல்வம் சார்பில் தனியாக மனு அளிக்கப்படுமா என்பது கூட இன்னும் தெளிவாகவில்லை. அப்படி அளிக்கப்பட்டால் உதயகுமாரனின் மனுவை ஒட்டி இருக்குமா. அவ்வாறு இருந்தால், அதை பிற கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றனவா என்ற புதிய கேள்விகளும், சந்தேகங்களும் உருவாக வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தன.

-நமது டில்லி நிருபர்-






      Dinamalar
      Follow us