மலையேற்றம் செல்பவர்களுக்கு ஏற்ற இடம் கோட்டே பெட்டா
மலையேற்றம் செல்பவர்களுக்கு ஏற்ற இடம் கோட்டே பெட்டா
ADDED : ஜன 03, 2024 11:24 PM

பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், வாரத்தில் ஐந்து நாட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள், வார இறுதி நாட்களில் எங்காவது ஜாலியாக செல்ல வேண்டும் என்று நினைப்பர்.
குறிப்பாக, மனதை அமைதியாக வைத்து கொள்வதற்காக, மலை பாங்கான இடங்களுக்கு செல்ல அதிகம் விரும்புவர்.
அதிலும் ஒரு சிலர் மலையேற்றம் செல்வதில் ஆர்வம் காட்டுவர். இத்தகையவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது கோட்டே பெட்டா. கர்நாடகாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் குடகின் மடிகேரியில் இருந்து 15 கி.மீ.,யில் உள்ளது கோட்டே பெட்டா மலை.
இந்த மலை, கடல் மட்டத்தில் இருந்து 5,134 அடி உயரத்தில் உள்ளது. மஹாபாரத காலத்தில் இந்த மலையில் பாண்டவர்கள், கணிசமான நேரத்தை செலவிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த இடம் வருவதால், பச்சை பசலேன காட்சி அளிக்கிறது. இந்த மலைக்கு செல்லும் வழியில் காபி தோட்டங்கள், பலா மரங்களை அதிகமாக காணலாம்.
மலை உச்சியில் இருந்து அடிவாரத்தில் உள்ள ஊர்களை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும். மலையேற்றத்தின் போது மங்கூஸ், கவுர் போன்ற அரிய வகை வன உயிரினங்களை கண்டுகளிக்கும் வாய்ப்பும் உள்ளது. மலை உச்சியில் ஒரு சிறிய சிவன் கோவிலும் உள்ளது.
இந்த மலை செங்குத்தாக இருப்பதால், மலையேற்றத்தின் போது கவனத்துடன் செல்ல வேண்டும். கோட்டே பெட்டா மலைக்கு சென்று வந்த பின்னர் மனம் உற்சாகமாக இருப்பதாக, அங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர்.
டிசம்பர் முதல் மார்ச் வரை இந்த மலைக்கு செல்ல உகந்த காலமாகும். பெங்களூரில் இருந்து மடிகேரிக்கு, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கார், பைக்குகளில் கூட சென்று வரலாம்.
- நமது நிருபர் -