கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் அம்யூஸ்மென்ட் பார்க் தாமதம்?
கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் அம்யூஸ்மென்ட் பார்க் தாமதம்?
ADDED : ஜன 19, 2025 07:06 AM

மாண்டியா: கே.ஆர்.எஸ்., அணையின் பிருந்தாவன் பூங்காவில், 'அம்யூஸ்மென்ட் பார்க்' அமைக்கும் மாநில அரசு திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை டெண்டர் அழைத்தும், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கவில்லை.
மாண்டியா, ஸ்ரீரங்கபட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை மற்றும் பிருந்தாவன் பூங்கா வரலாற்று பிரசித்தி பெற்றது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
பிருந்தாவனத்தில் அம்யூஸ்மென்ட் பார்க் அமைக்க, மாநில அரசு திட்டம் வகுத்தது. அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில் 198 ஏக்கரில் 2,663 கோடி ரூபாய் செலவில் அமைக்க தயாரானது.
திட்டத்தை செயல்படுத்த 2024 செப்டம்பரில் முதன்முறையாக டெண்டர் அழைக்கப்பட்டது. ஒரு நிறுவனமும் பங்கேற்காததால், டிசம்பரில் மீண்டும் டெண்டர் கோரப்பட்டது. அப்போதும் யாரும் பங்கேற்கவில்லை.
எனவே டெண்டரில் பங்கேற்கும் காலகட்டத்தை, ஜனவரி 23 வரை சுற்றுலாத்துறை நீட்டித்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க ஆர்வம் காட்டாததால், திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒப்பந்தம் பெறும் நிறுவனம், நான்கரை ஆண்டுகளில் அம்யூஸ்மென்ட் பார்க் அமைக்கும் பணியை முடிக்க வேண்டும். 30 ஆண்டுகள் நிர்வகிக்க வேண்டும். மூன்று கட்டங்களில் கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் மேம்படுத்தப்படும்.
அம்யூஸ்மென்ட் பார்க் திட்டத்தில் பிருந்தாவன் பூங்காவில் காவிரி தாயின் உருவச்சிலை, வாட்டர் பார்க், பெங்குவின் பார்க், வார்ரட் பிளேன் ரைடு, ரோலர் கோஸ்டர், ஹாட் ஏர் பலுான் ரைடு, பாராசைலிங், அரோமா கார்டன், பொட்டானிகல் கார்டன், ஜங்கிள் போட் ரைடு, ஸ்கை வாக், வாக்ஸ் மியூசியம், புட் பிளாசா உட்பட பல வசதிகள் இருக்கும்.
சுற்றுலா பயணியரின் வாகனங்களை பார்க்கிங் செய்ய, பிருந்தாவன் பூங்கா அருகிலேயே, 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். கே.ஆர்.எஸ்., அணைக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

