மதுக்கடையில் காசு கேட்டதால் மொத்த ஊருக்கும் மின் துண்டிப்பு; கேரள மின் ஊழியர்கள் சஸ்பெண்ட்!
மதுக்கடையில் காசு கேட்டதால் மொத்த ஊருக்கும் மின் துண்டிப்பு; கேரள மின் ஊழியர்கள் சஸ்பெண்ட்!
ADDED : செப் 25, 2024 10:22 AM

திருவனந்தபுரம்: மதுக்கடையில் பணம் கேட்டதால் கொந்தளித்த மின் ஊழியர்கள், மொத்த ஊருக்கும் மின் தடை ஏற்படுத்திய சம்பவம், கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரித்த மின் வாரியம் 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
குடிபோதை ஆசாமிகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடப்பது ஒருபுறம் எனில், குடித்துவிட்டு சாலைகளில் பிரச்னை செய்தும் வருகின்றனர். அந்தவகையில் கேரளாவில் பாரில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. பாரில் மது குடித்துவிட்டு கேரளா மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் பணம் தர மறுத்துள்ளனர்.
இது வாக்குவாதமாக மாறியது. பழிவாங்கும் எண்ணத்தில், மின்வாரிய ஊழியர்கள் 11 கே.வி., மின் பீடரில் தடை ஏற்படுத்தினர். இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. விசாரித்தபோது தான், ஊழியர்கள் போதையில் இருப்பதும், காரணமே இல்லாமல் மின் தடை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து பதவியை துஷ்பிரயோகம் செய்யும் வகையில், மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் செய்த சம்பவம் மின்சார வாரியம் தலைமை அலுவலக அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. மதுக்கடை ஊழியர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் மின்தடையை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
சஸ்பெண்ட்
இதையடுத்து, தலைமை விஜிலென்ஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில், அபிலாஷ், சலீம் குமார், சுரேஷ் குமார் ஆகிய மின்வாரிய ஊழியர்கள் 3 பேரை நிர்வாக இயக்குநர் பிரபாகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக கேரள மாநில மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.