நடத்துனர் இல்லாமல் 850 பஸ்கள் இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு
நடத்துனர் இல்லாமல் 850 பஸ்கள் இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு
ADDED : நவ 11, 2024 05:12 AM
பெங்களூரு: பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், செலவை குறைக்கும் நோக்கிலும், 850க்கும் மேற்பட்ட பஸ்களில், நடத்துனர் இல்லாத சேவை வழங்க கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கே.எஸ்.ஆர்.டி.சி., தினமும் 8,000க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்குகிறது. 28 லட்சம் கி.மீ., வரை போக்குவரத்து சேவை வழங்குகிறது. டீசல், அன்றாட நிர்வகிப்பு, ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பேட்டா உட்பட ஒரு பஸ்சுக்கு ஒரு கி.மீ.,க்கு 50 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், 5,000க்கும் அதிகமான பஸ்களுக்கு ஒரு கி.மீ.,க்கு 50 ரூபாய்க்கும் குறைவான வருவாய் கிடைக்கிறது.
வருவாய் குறைவதால், கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு பொருளாதார சுமை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடத்துனர் இல்லாமல், பஸ்களை இயக்கும் நடைமுறையை செயல்படுத்தியுள்ளது.
பெங்களூரு - மைசூரு; பெங்களூரு - தாவணகெரே; பெங்களூரு - ஷிவமொக்கா; பெங்களூரு - மடிகேரி உட்பட குறைவான நிறுத்தங்கள் இல்லாத, 'பாயின்ட் டு பாயின்ட்' வழித்தடங்களில், நடத்துனர் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வசதியை மேலும் 850க்கும் மேற்பட்ட பஸ்களில் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
நடத்துனர் இல்லாத பஸ்களில், ஓட்டுனர்களே பயணத்தை துவக்குவதற்கு முன், டிக்கெட் கொடுப்பார். வழியில் நிர்ணயித்த நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி, பயணியர் ஏறினால் ஓட்டுனரே டிக்கெட் கொடுப்பார். இதனால் ஒரு கி.மீ.,க்கு 10 ரூபாய் மிச்சமாகும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.