ஹாசனாம்பா உற்சவம் 24ல் துவக்கம் கே.எஸ்.ஆர்.டி.சி., 100 சிறப்பு பஸ்கள்
ஹாசனாம்பா உற்சவம் 24ல் துவக்கம் கே.எஸ்.ஆர்.டி.சி., 100 சிறப்பு பஸ்கள்
ADDED : அக் 13, 2024 11:08 PM

ஹாசன்: ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ஹாசனாம்பா உற்சவத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கூடுதலாக 100 பஸ்களை இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
ஹாசனின் ஹாசனாம்பா கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும்.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். அக்டோபர் 24 முதல் நவம்பர் 3 வரை ஹாசனாம்பா கோவில் திறந்திருக்கும். முதல் நாளும், கடைசி நாளும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இருக்காது. மற்ற ஏழு நாட்களில், தினமும் 24 மணி நேரமும், ஹாசனாம்பாவை தரிசிக்க வாய்ப்பிருக்கும்.
இந்த ஏழு நாட்களும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்.
பெங்களூரு, மைசூரு, துமகூரு, சிக்கமகளூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருவர்.
கடந்த 2023ம் ஆண்டு 2 லட்சம் பேர் வந்தனர். இம்முறை எண்ணிக்கை அதிகம் இருக்கும்.
பயணியர் நெருக்கடிக்கு தீர்வு காண, கூடுதலாக 100 பஸ்கள் இயக்கப்படும். ஹாசனாம்பா உற்சவத்தை முன்னிட்டு, சுற்றுலா சலுகை அறிமுகம் செய்ய கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.
ஹாசன் நகர் பஸ் நிலையத்தில் இருந்து, சக்லேஸ்புரா - பேலுார் - ஹளேபீடுக்கு சுற்றுலா செல்லலாம். நகர பஸ் நிலையத்தில் இருந்து, காலை 7:30 மணிக்கு புறப்படும் பஸ், பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து, மாலை 5:30 மணி முதல் 6:30 மணிக்குள் திரும்பும். இதற்கு இன்னும் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
சுற்றுலாவின் போது சிற்றுண்டி, உணவு நேரத்தில் ஹோட்டல் அருகில் பஸ்கள் நின்று செல்லும். சிற்றுண்டி, உணவுக்கான செலவு பயணியர் பொறுப்பாகும்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.