ADDED : ஏப் 04, 2025 06:49 AM
பெங்களூரு: “கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் தொழிற்சாலை, 2024 - 25ம் ஆண்டு 1,787 கோடி ரூபாய் வர்த்தகம் செய்து, 416 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது,” என, தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசு சார்ந்த கே.எஸ்.டி.எல்., எனும் கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் தொழிற்சாலை, 2024 - 25ம் ஆண்டில் 1,787 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்தது. 416 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது.
கடந்த நிதியாண்டை விட, 54 கோடி ரூபாய்க்கும் அதிகமான லாபம் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் 43,144 மெட்ரிக் டன் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் விற்பனை செய்தது.
விற்பனை மற்றும் உற்பத்தியில் கே.எஸ்.டி.எல்., சாதனை செய்துள்ளது. லாபத்தில் 30 சதவீதம் தொகை, அரசிடம் வழங்கப்படும், 2023 - 24ம் ஆண்டில் 37,916 டன் உற்பத்திகளை விற்பனை செய்தது. 1,570 கோடி ரூபாய் வர்த்தகம் செய்து, 362 கோடி ரூபாய் லாபம் பெற்றது. இதில் 108 கோடி ரூபாய் அரசிடம் வழங்கப்பட்டது.
இதற்கு அதிகம் லாபம் பெறும் அரசு தொழிற்சாலைகளில், 21வது இடத்தில் இருந்தது. தற்போது மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. கடந்தாண்டு ஏற்றுமதி மூலம் 23.2 கோடி ரூபாய் வர்த்தகம் நடத்தியது.
சென்னை, ஹைதரபாத், மும்பை, அகமதாபாத், டில்லி, சத்தீஸ்கர், கொல்கட்டாவில் கே.எஸ்.டி.எல்.,வின் கிளைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. விஜயபுராவில் 250 கோடி ரூபாய் செலவில், கிளை தொழிற்சாலை அமைக்கப்படும். 2025ல் 1,819 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்ய, இலக்கு நிர்ணயித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

