அரசியலில் 'ரீ என்ட்ரி' தரும் குமார் பங்காரப்பா; கர்நாடகா பா.ஜ.,வில் சூடு பிடிக்கிறது ஆட்டம்
அரசியலில் 'ரீ என்ட்ரி' தரும் குமார் பங்காரப்பா; கர்நாடகா பா.ஜ.,வில் சூடு பிடிக்கிறது ஆட்டம்
ADDED : டிச 17, 2024 10:15 PM

பதவி ஆசையும், அரசியல்வாதிகளையும் பிரிக்க முடியாது. பதவியை அடைவதற்கு அரசியல்வாதிகள் அடிக்கும், 'ஸ்டன்ட்', கோஷ்டி மோதல் போன்றவை ஆட்டத்தை சூடு பிடிக்க வைக்கும்.
கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி, பல பிரச்னைகளை சந்திக்கின்றன. இது ஒரு புறம் இருக்க, காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் நாற்காலிக்காக சித்தராமையாவும், சிவகுமாரும் சண்டையிடுகின்றனர்.
ஆளுங்கட்சியில் தான், பதவி சண்டை இருக்கிறது என்றால், எதிர்க்கட்சியான பா.ஜ., விலும் இதே நிலைமையே நீடிக்கிறது.
அடம்
பா.ஜ.,வின் மாநில தலைவராக இருப்பவர் விஜயேந்திரா. இவரை மாற்ற வேண்டும் என அக்கட்சியில் ஒரு கோஷ்டி அடம் பிடிக்கிறது. இதில் முக்கிய இடத்தை பிடிப்பவர் பசனகவுடா பாட்டீல் எத்னால்.
தன் தலைமையில் ஒரு கோஷ்டியை உருவாக்கி, கட்சி தலைமைக்கு தீராத தலைவலியை கொடுத்து வருகிறார்.
இவ்விவகாரம் குறித்து பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எத்னாலுக்கு கட்சியின் டில்லி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது.
இதன் பின்னரே, அவரது ஆட்டம் சற்று அடங்கி உள்ளது. இதனால் பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா பெருமூச்சு விட்டு நிம்மதியானார்.
குண்டு
இவரின் நிம்மதியை கெடுக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் குமார் பங்காரப்பா, தனக்கு தான் கட்சி தலைவர் பதவி வேண்டும் என ஒரு குண்டை துாக்கி போட்டு உள்ளார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.பங்காராப்பா மகன் தான் குமார் பங்காரப்பா. இவரது உடன் பிறந்த சகோதரர், மது பங்காரப்பா சித்தராமையா அமைச்சரவையில் துவக்க கல்வித்துறை அமைச்சராக உள்ளார்.
அண்ணன் - தம்பி இருவரும் வீட்டிலும், அரசியலிலும் மோதிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், ஷிவமொக்கா மாவட்டம் சொரபா தொகுதியில் அண்ணன், தம்பி இருவரும் மோதிக் கொண்டனர். மது பங்காரப்பா வெற்றியால், குமார் பங்காரப்பா, 'அப்செட்' ஆனார்.
தோல்வியிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளி வந்து விட்டார். தற்போது, விஜயேந்திராவின் எதிர் கோஷ்டியில் உள்ளார். பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு ஆசைப்படுகிறார். தனது ஆசையை வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
'பா.ஜ., மாநில தலைவர் பதவி மீது எனக்கு அலாதி ஆசை. எப்படியாவது அந்த பதவியை அடைய வேண்டும் என என்பதே எனது கனவு. பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார்.
அவருடன் சேர்ந்து விஜயேந்திராவும் ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளது' என கூறி தனது அரசியல் ஆட்டத்தை துவங்கி உள்ளார்.
எப்படியாவது தலைவர் பதவி கிடைக்க வேண்டுமென்று, எத்னால் கோஷ்டியில் தஞ்சம் புகுந்து உள்ளார்.
சபதம்
இதற்கிடையே கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, இவரின் ஆதரவாளர்கள் ஐந்து பேர், பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு கண்டிப்பாக பழி தீர்ப்பேன் என குமார் பங்காரப்பா சபதம் போட்டு உள்ளார்.
பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த, பா.ஜ., தலைவர் கூறுகையில், 'நடந்து முடிந்த இடைத்தேர்தலில், பா.ஜ., மூன்று தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
'இதற்கு முழு பொறுப்பு விஜயேந்திரா தான், தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். இதில் குமார் பங்காரப்பாவும் ஒருவர். எத்னாலுடன் சேர்ந்து எப்படியாவது தலைவர் பதவியை பெற்றுவிடலாம் என்று தப்பு கணக்கு போடுகிறார். கோஷ்டி மோதல், பதவி ஆசை எல்லாம் கட்சிக்கு நல்லது இல்லை.
'இதுபோன்ற விஷயங்களால் கட்சி பலவீனமாகுமே தவிர, முன்னேற்றம் அடையாது' என்றார்.
- நமது நிருபர் -