இதற்கு தானே ஆசைப்பட்டாய் குமாரண்ணா! ம.ஜ.த., அதிருப்தி தலைவர்கள் குதுாகலிப்பு
இதற்கு தானே ஆசைப்பட்டாய் குமாரண்ணா! ம.ஜ.த., அதிருப்தி தலைவர்கள் குதுாகலிப்பு
ADDED : மார் 19, 2024 10:32 PM

நம் நாட்டின் வட மாநிலங்களில் பா.ஜ., அசுர வளர்ச்சி அடைந்து உள்ளது. ஆனால், தெற்கில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த, ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும் தான்.
கர்நாடகாவில் மாநில கட்சியாக உள்ள ம.ஜ.த.,வால் தனித்து ஆட்சிக்கு வர முடியவில்லை. தேர்தலுக்கு தேர்தல் காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து விடும். இத்தனைக்கும் ம.ஜ.த., கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா பிரதமராக இருந்தவர். அவரால் சொந்த கட்சியை தனித்து ஆட்சிக்கு கொண்டு வர முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம் ம.ஜ.த.,வில் நிலவும் குடும்ப அரசியல். தேவகவுடாவின் மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா எம்.எல்.ஏ.,வாகவும், பேரன்கள் பிரஜ்வல் எம்.பி., ஆகவும், சூரஜ் எம்.எல்.சி., ஆகவும் உள்ளனர்.
தொண்டர்கள் சலிப்பு
'கட்சிக்காக உழைத்து என்ன பயன். தேவகவுடா குடும்பத்தில் உள்ளவர்களுக்கே, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது' என்று, ம.ஜ.த., தொண்டர்களே சில நேரத்தில் சலித்து கொள்கின்றனர். ஒக்கலிகரான தேவகவுடாவுக்கு பழைய மைசூரு பகுதியில், நல்ல செல்வாக்கு உள்ளது.
இதனால் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் ம.ஜ.த.,வை ஒக்கலிகர்கள் ஆதரித்து வந்தனர். கடந்த 2018 சட்டசபை தேர்தலில் ம.ஜ.த., வெற்றி பெற்ற 37 இடங்களில் 31 இடங்கள், பழைய மைசூரில் இருந்து கிடைத்தது.
ஆனால் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஒக்கலிகர்கள் ம.ஜ.த.,வை கை விட்டனர். இதனால் 19 இடங்களில் மட்டுமே ம.ஜ.த.,வால் வெற்றி பெற முடிந்தது. இதிலும் சில எம்.எல்.ஏ.,க்களை, காங்கிரசார் இழுக்க பார்த்தனர். கட்சியை காப்பாற்ற பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார் குமாரசாமி. இதற்கு ம.ஜ.த., தலைவராக இருந்த இப்ராஹிம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரை தலைவர் பதவியில் இருந்தே நீக்கினர். பா.ஜ.,வுடனான கூட்டணிக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு உடன்பாடில்லை. ஆனாலும் கட்சிக்காக எதுவும் பேசாமல் உள்ளனர்.
காங்கிரசார் கிண்டல்
இதுபோல ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்ததில், பா.ஜ., தலைவர்கள் சிலருக்கும் விருப்பம் இல்லை. தங்கள் அதிருப்தியை வெளிப்படையாக காட்டினர். ஆனாலும் பா.ஜ., டில்லி மேலிட தலைவர்களுடன் மட்டும், குமாரசாமி பேசி வந்தார். லோக்சபா தேர்தலில் பழைய மைசூரில் உள்ள எட்டு தொகுதிகளை, ம.ஜ.த., வாங்கும் என்று எல்லாம் பேச்சு அடிபட்டது.
ஆனால் கூட்டணி பங்கீடு பேச்சு முடிந்த நிலையில், ம.ஜ.த.,வுக்கு மூன்று தொகுதிகளை மட்டுமே ஒதுக்க, பா.ஜ., முன்வந்து உள்ளது. அதுவும் ம.ஜ.த.,வுக்கு செல்வாக்கு உள்ள ஹாசன், மாண்டியா, கோலார் மட்டும் தான். பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி சேர்ந்த போது, குமாரசாமியை பா.ஜ., தலைவர் 'ஆஹா ஒஹோ' என்று புகழ்ந்து வந்தனர்.
ஆனால் நாட்கள் செல்ல, செல்ல குமாரசாமியை பற்றி பேசுவதை தவிர்த்தனர். கலபுரகி, ஷிவமொகாவில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டங்களுக்கு கூட, குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை. தற்போது இதை நேரடியாக கூறி மனம் குமுறி உள்ளார் குமாரசாமி. அவரது நிலையை கண்டு காங்கிரசார் ஒரு பக்கம் கிண்டல் அடித்து வருகின்றனர்.
பலம் இல்லை
இதுமட்டுமின்றி ம.ஜ.த., தலைவர்கள் கூட, குமாரசாமி மீது அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்து உள்ளனர். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காமல், தனித்து நின்று போட்டியிட்டால் கூட, பழைய மைசூரில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்றிருக்க முடியும். நாம் வெற்றி பெறும் மூன்று தொகுதிகளை மட்டும் தான் நமக்கு கொடுத்து உள்ளனர்.
எதற்காக பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்திருக்க வேண்டும் என்று, கேள்வி எழுப்பி உள்ளனர். பழைய மைசூரில் பா.ஜ.,வுக்கு அவ்வளவு பலமே இல்லை. நமக்கு இருக்கும் பலத்தை பயன்படுத்தி, வெற்றி பெற்று இருக்கலாம் என்றும் கூறி உள்ளனர்.
பா.ஜ., கூட்டணியில் ம.ஜ.த.,வுக்கு மூன்று தொகுதிகள் கிடைக்கும் என்று, ம.ஜ.த., முன்னாள் தலைவர் இப்ராஹிம் கூறி இருந்தார். அவரது கணிப்பு அப்படியே உறுதியாகி உள்ளது. பா.ஜ., கூட்டணியில் குமாரசாமிக்கு உரிய மரியாதை கிடைக்காதை பார்த்து, கட்சிக்குள் இருக்கும் அவரது எதிர்ப்பாளர்கள் குதுாகலித்து வருகின்றனர். 'பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி எத்தனை நாட்கள் நீடிக்கும் பார்க்கலாம்' என்று, காங்கிரசார் கிண்டல் அடிக்க ஆரம்பித்து உள்ளனர்.
- நமது நிருபர் -

