குமாரசாமி -- சோமண்ணா சந்திப்பு தேர்தல் குறித்து ஆலோசனை
குமாரசாமி -- சோமண்ணா சந்திப்பு தேர்தல் குறித்து ஆலோசனை
ADDED : பிப் 01, 2024 06:43 AM

ராம் நகர்: முன்னாள் அமைச்சர் சோமண்ணா, மாநில ம.ஜ.த., தலைவர் குமாரசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளன. தொகுதி பங்கீடு குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை.
ம.ஜ.த.,வுக்கு செல்வாக்குள்ள மூன்று, நான்கு தொகுதிகளை பா.ஜ., விட்டுத்தரக்கூடும். லோக்சபா தேர்தலில் பல தொகுதிகளில், பா.ஜ., சீட்டுக்கு பலத்த போட்டி எழுந்துள்ளது.
இதற்கிடையில், பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் சோமண்ணா, மாநில ம.ஜ.த., தலைவர் குமாரசாமியை நேற்று சந்தித்து பேசினார்.
ராம்நகர், பிடதி அருகில் உள்ள பண்ணை வீட்டில், அரை மணி நேரத்துக்கு மேலாக, இரண்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பேச்சு நடக்கும் போது, இவ்விருவரை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.
கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபாவுக்கு பா.ஜ., சார்பில் தேர்வு செய்யப்பட்ட ராஜிவ் சந்திரசேகரின் பதவி காலம் முடிகிறது. இவரால் காலியாகும் ராஜ்யசபா இடத்தின் மீது, முன்னாள் அமைச்சர் சோமண்ணா கண் வைத்துள்ளார். ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் நோக்கில், குமாரசாமியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளதால், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, பிரசார திட்டங்கள் உட்பட முக்கியமான விஷயங்கள் குறித்து, தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக ம.ஜ.த., அறிவித்தவுடன், முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, சோமண்ணா சந்தித்து பேசினார். இப்போது குமாரசாமியை சந்தித்துள்ளார்.