குமாரசாமி, பசவராஜ் பொம்மை எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா
குமாரசாமி, பசவராஜ் பொம்மை எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா
ADDED : ஜூன் 15, 2024 05:57 PM

பெங்களூரு:மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ., பதவியையும்; மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி, எம்.எல்.சி., பதவியையும் ராஜினாமா செய்தனர்.
இம்முறை நடந்த லோக்சபா தேர்தலில், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய அரசியல் கட்சிகள், தகுந்த வேட்பாளர்கள் கிடைக்காததால், பெரும் தலைவர்களை களமிறக்கின.
* அனைவரும் வெற்றி
பா.ஜ., -- ம.ஜ.த., காங்கிரஸ் என மொத்தம் மூன்று எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.எல்.சி., ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றனர்.
அதாவது சென்னப்பட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., குமாரசாமி மாண்டியாவிலும்; ஷிகாவி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை ஹாவேரியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் இருவருமே முன்னாள் முதல்வர்கள்.
மேலும், சண்டூர் காங்., - எம்.எல்.ஏ., துக்காராம், பல்லாரியிலும்; பா.ஜ., - எம்.எல்.சி., கோட்டா சீனிவாச பூஜாரி, உடுப்பி - சிக்கமகளூரிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர் சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.
* கடிதம்
இந்நிலையில், துக்காராம் நேற்று( 14.06.2024) எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். குமாரசாமி, பசவராஜ் பொம்மை ஆகியோர், சட்டசபை சபாநாயகர் காதரிடம் இன்று(15.06.2024) ராஜினாமா கடிதம் அளித்தனர்.
இதே வேளையில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பதவி கிடைத்ததற்கு, குமாரசாமிக்கு, சபாநாயகர் வாழ்த்து தெரிவித்தார்.
மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம், கோட்டா சீனிவாச பூஜாரி, எம்.எல்.சி., பதவி ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதன் மூலம், அவர், தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்தார்.