ADDED : பிப் 20, 2024 11:28 PM

மாண்டியா : ''லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, மாண்டியாவில் இருந்து போட்டியிட போகிறார் என்று சிலர் சொல்கின்றனர். மாண்டியாவுக்கு அவர் வந்தால் வரவேற்கிறேன்,'' என்று, விவசாய அமைச்சர் செலுவராயசாமி கூறி உள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, மாண்டியாவில் இருந்து போட்டியிட போகிறார் என்று சிலர் சொல்கின்றனர். மாண்டியாவுக்கு அவர் வந்தால் வரவேற்கிறேன். யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது மக்களின் முடிவு.
காங்கிரஸ் அரசு ஐந்து வாக்குறுதிகளை கொடுத்தது; அதை அமல்படுத்தி உள்ளோம். நாங்கள் மக்களுக்காக பணியாற்றுகிறோம். மக்கள் ஆசிர்வதிப்பர். மாண்டியாவில் காங்கிரஸ் சார்பில், புது முகம் போட்டியிடுவார் என்ற பேச்சுக்கே இடமில்லை.
காங்கிரஸ் வேட்பாளராக ஸ்டார் சந்துரு போட்டியிடுவாரா என்று, எனக்கு தெரியாது. அவரும் 'சீட்' கேட்கிறார். கூடிய விரைவில் மாண்டியா காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று தெரிந்து விடும். தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உள்ளது.
உத்தர பிரதேசகாரர்கள் கூட, கர்நாடகாவில் போட்டியிடலாம். நான் பீதரில் போட்டியிடலாம். பீதரை சேர்ந்தவர் இங்கு போட்டியிடலாம். யாரையும் இங்கு போட்டியிடுங்கள், அங்கு போட்டியிடுங்கள் என்று சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

