அமித் ஷாவுடன் குமாரசாமி சந்திப்பு லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை
அமித் ஷாவுடன் குமாரசாமி சந்திப்பு லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசனை
ADDED : ஜன 18, 2024 05:16 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன். முன்னாள் முதல்வரும், மாநில ம.ஜ.த., தலைவருமான குமாரசாமி, நேற்று டில்லியில் ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன், ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து, பேச்சு நடத்தப்படுகிறது. இது குறித்து ஆலோசிக்க, பொங்கல் பண்டிகை முடிந்த பின், முன்னாள் முதல்வர் குமாரசாமி, டில்லிக்கு செல்வார் என, கூறப்பட்டது. அதன்படியே பொங்கல் பண்டிகை முடிந்த கையோடு, குமாரசாமி டில்லி சென்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி, முன்னாள் எம்.பி., குபேந்திர ரெட்டி உடன் இருந்தனர். 45 நிமிடங்கள் வரை, ஆலோசனை நடந்தது.
கர்நாடக அரசியல் நிலவரங்களை, அமித்ஷாவிடம் குமாரசாமி விவரித்தார். அப்போது அமித்ஷா கூறியது:
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, ராமர் விக்ரகம் பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் முடிந்த பின், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுடன், தொகுதி பங்கீடு உள்ளிட்ட மற்ற விஷயங்களை முடிவு செய்யலாம்.
கர்நாடகாவில், 28 லோக்சபா தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து, நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க, கர்நாடகாவில் என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றை செய்து ஒன்றாக தேர்தலை சந்திக்கலாம். பா.ஜ., - ம.ஜ.த., தன்னம்பிக்கையுடன் போராடலாம்.
இவ்வாறு குமாரசாமியிடம் அவர் கூறினார்.
'கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு, ஓராண்டு முடிவதற்குள், ஆளுங்கட்சிக்கு எதிரான அலை எழுந்துள்ளது. மக்கள் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். மாநில அரசின் தோல்விகளை, மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்' என, இரண்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.
அமித்ஷாவை சந்தித்த பின், குமாரசாமி கூறியதாவது:
அமித்ஷாவுடன் நடந்த பேச்சு, மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. கர்நாடகாவின் வறட்சி சூழ்நிலை குறித்தும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். வறட்சி நிவாரணத்துக்கு, மாநில அரசு ஒரு பைசா அளிக்கவில்லை என்பது, அவருக்கு தெரியும். நானும் அனைத்து விஷயங்களையிம், அவரிடம் விவரித்தேன்.
முக்கால் மணி நேரம் நடந்த ஆலோசனையில், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். இதற்காக பா.ஜ., - ம.ஜ.த., ஒருங்கிணைந்து செயல்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.