ADDED : ஜன 11, 2025 11:01 PM

பா.ஜ., அதிருப்தி அணியினர் டில்லியில் மத்திய அமைச்சர் குமாரசாமியை சந்தித்துப் பேசினர். அப்போது தங்களுக்கு ஆதரவாக பா.ஜ., மேலிடத்திடம் பேசும்படி கேட்டுள்ளனர். ஆனால் 'உங்கள் உட்கட்சி பிரச்னையில் நான் தலையிட மாட்டேன்' என, குமாரசாமி மறுத்துவிட்டார்.
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக, அக்கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. இந்த அணி, அரசுக்கு எதிராக தனியாக போராட்டம் நடத்தி வருகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் டில்லி சென்று, மத்திய அமைச்சர்களை சந்தித்து, விஜயேந்திராவுக்கு எதிராக புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜயேந்திரா மீது, கட்சி மேலிடத்திற்கு நல்ல அபிப்ராயம் இருப்பதால், எதிரணி பேச்சை யாரும் கேட்பது இல்லை.
இந்நிலையில் ரமேஷ் ஜார்கிஹோளி தலைமையில் நேற்று முன்தினம் டில்லி சென்ற, பா.ஜ., அதிருப்தி அணியினர், மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமியை சந்தித்துப் பேசினர்.
அப்போது ரமேஷ் ஜார்கிஹோளி, 'நீங்கள், எங்கள் கட்சி மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளீர்கள். விஜயேந்திராவுக்கு எதிராக நாங்கள் நடத்தும் போராட்டம் பற்றி, மேலிடம் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்' என்று கேட்டுள்ளார்.
ஆனால் குமாரசாமி மறுத்துவிட்டார். 'உங்கள் உட்கட்சி பிரச்னையில் நான் தலையிடுவது சரியாக இருக்காது. விஜயேந்திராவிடம் வேண்டும் என்றால் பேசுகிறேன்' என்று கூறி இருக்கிறார். இதனால் ஏமாற்றத்துடன் அதிருப்தி அணியினர் திரும்பினர்
- நமது நிருபர் -.

