ADDED : அக் 06, 2024 08:38 PM

ஹாசன்:
''மத்திய அமைச்சர் குமாரசாமி கூறும் கருத்துக்கு, பதில் அளித்தால் நாங்களும் பொய்யர் ஆகிவிடுவோம்,'' என்று, விவசாய அமைச்சர் செலுவராயசாமி கிண்டல் அடித்து உள்ளார்.
ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு என்ன ஆகிவிட்டது என்று தெரியவில்லை. சமீபகாலமாக அதிகம் பொய் பேசுகிறார். அரசு, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக அவர் கூறும் கருத்துகள் அனைத்தும் பொய். அந்த கருத்துக்கு பதில் அளித்தால், நாங்களும் பொய்யர் ஆகிவிடுவோம்.
ஜனநாயக அமைப்பில் மக்கள் பிரதிநிதியாக வருவது மிகவும் அரிது. முற்பிறவியில் செய்த புண்ணியத்தால், இப்போது மக்கள் பிரதிநிதியாக உள்ளோம்.
குமாரசாமி மத்திய அமைச்சராக உள்ளார். அவருக்கு நிறைய வேலை இருக்கும். ஆனால், அவர் சில்லரை அரசியல் செய்கிறார்.
சித்தராமையா சாதாரண தலைவர் இல்லை. மக்கள் விரும்பும் முதல்வர். குமாரசாமி 14 மாதங்கள் முதல்வராக இருந்து என்ன செய்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின், அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள குழுவை அமல்படுத்துவது உட்பட பல முக்கிய விஷயங்களை செய்து உள்ளோம். குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் முதல்வராக இருந்து, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
இதனால் மக்கள் காங்கிரசுக்கு 135 எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்தனர். கடந்த 30 ஆண்டுகளில் அதிக எம்.எல்.ஏ.,க்களுடன் வெற்றி பெற்ற ஒரே கட்சி காங்கிரஸ் தான். ஆனாலும் எங்கள் ஆட்சியை அகற்ற போராடுகின்றனர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவதால், எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்பட கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.