உள்ளூர் பா.ஜ., தலைவர்களுடன் கைகோர்க்க விரும்பும் குமாரசாமி
உள்ளூர் பா.ஜ., தலைவர்களுடன் கைகோர்க்க விரும்பும் குமாரசாமி
ADDED : செப் 25, 2024 07:11 AM

லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து போட்டியிட்டன. இதனால், பழைய மைசூரு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இரு கட்சிகளுக்கும் கூடுதல் பலம் கிடைத்தது. காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
பா.ஜ.,வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் இடையூறுக்கு இடையிலும் ம.ஜ.த., இரண்டு தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. ம.ஜ.த., உதவியால் குறிப்பிட்ட தொகுதிகளில் பா.ஜ.,வின் செல்வாக்கு உயர்ந்தது.
9வது இடம்
இதனால், பா.ஜ.,வின் தேசிய தலைவர்களிடையே, ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமியின் செல்வாக்கும் உயர்ந்தது.
இதற்கு உதாரணமாக, மத்திய அமைச்சரவையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பின், கேபினட் அமைச்சர்களில், குமாரசாமிக்கு 9வது இடம் வழங்கப்பட்டது.
கர்நாடகாவை சேர்ந்த பிரஹலாத் ஜோஷி, ஷோபா, சோமண்ணா ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக இருக்கின்றனர்.
ஆனால், இவர்கள் அனைவருமே குமாரசாமிக்கு அடுத்து தான். அதுவும், பிரஹலாத் ஜோஷி தவிர, மற்றவர்களுக்கு இணை அமைச்சர் பதவி மட்டுமே தரப்பட்டது. மேலும், கனரக தொழில்கள் துறை மற்றும் உருக்கு துறை என்ற முக்கியமான துறைகள் குமாரசாமிக்கு வழங்கப்பட்டன. அவரும் அதற்கு ஏற்றார் போல், நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற்சாலைகள் மேம்பாட்டுக்காக உழைத்து வருகிறார்.
முக்கியத்துவம்
இதற்கிடையில், கர்நாடக அளவில் அரசியல் ரீதியாக எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்கு குமாரசாமியின் கருத்தை பா.ஜ., மேலிடம் கேட்கிறது. மூடா முறைகேடு போராட்டமாக இருந்தாலும் சரி, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடாக இருந்தாலும் சரி, அவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் என பா.ஜ.,வின் உச்சபட்ச அதிகாரம் படைத்த தலைவர்களே ஆதரவு தெரிவிக்கின்றனர்.
தேசிய அளவிலும், பல்வேறு மத்திய அமைச்சர்கள், கவுரவம் அளித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், மாநில பா.ஜ.,வில் அதிகாரம் படைத்த தலைவர்கள் யாரும் இல்லை என்று அக்கட்சி மேலிடம் கருதுவதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதனாலேயே, மூடா முறைகேடு விஷயத்தை, குமாரசாமி சொல்லி தான், பா.ஜ., மேலிடம் முன்னுரிமை அளித்து, அடுத்தகட்ட நகர்வுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்த மரியாதையே அப்படியே தக்கவைத்துக் கொள்வது குமாரசாமிக்கு இருக்கும் முக்கியமான சவால். இதனால், மாநில பா.ஜ., தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள், தொண்டர்களை ஒருங்கிணைத்துச் செல்ல அவர் முயற்சித்து வருகிறார்.
- நமது நிருபர் -