கூட்டணிக்கு தொண்டர்கள் எதிர்ப்பு விழி பிதுங்கும் குமாரசாமி
கூட்டணிக்கு தொண்டர்கள் எதிர்ப்பு விழி பிதுங்கும் குமாரசாமி
ADDED : பிப் 28, 2024 06:08 AM

கர்நாடகாவில் மாநில கட்சியாக உள்ள ம.ஜ.த.,வால், சட்டசபை, லோக்சபா தேர்தல்களில், தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. இதனால் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.,வுடன் தேர்தலுக்கு தேர்தல், கூட்டணி வைக்கின்றனர்.
கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சி ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில், காங்கிரசுடன் ம.ஜ.த.,கூட்டணி அமைத்தது. குமாரசாமி முதல்வர் ஆனார்.
பதிலுக்கு பதில்
கடந்த 2019ல் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர், பதவியை ராஜினாமா செய்ததால், குமாரசாமியின் முதல்வர் நாற்காலி பறிபோனது. தனது பதவி பறிபோக, பா.ஜ., தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்தார். பதிலுக்கு பா.ஜ., தலைவர்களும், குமாரசாமியை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ம.ஜ.த., படுதோல்வி அடைந்தது. வேறு வழியின்றி பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.ஜ.த., அடைக்கலம் புகுந்தது.
லோக்சபா தேர்தலை பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து சந்திக்கிறது. கட்சிகள் மேல்மட்ட தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தாலும், இரண்டாம் கட்ட தலைவர்கள், தொண்டர்கள் இடையில் மோதல் போக்கு நீடிக்கிறது. ம.ஜ.த., - எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை.
இதுபற்றி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர் வெளிப்படையாகவே கூறி விட்டார். குமாரசாமி மீதான அதிருப்தியால், காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கம் காட்டுகிறார்.
பா.ஜ., பிடிவாதம்
பா.ஜ., முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா ஆகியோரும், ம.ஜ.த.,வை கூட்டணியில் சேர்த்ததற்கு அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். மாண்டியா, ஹாசன் தொகுதிகளை ம.ஜ.த.,வுக்கு விட்டுத்தர கூடாது என்று, பா.ஜ., தொண்டர்கள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர்.
சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு, பா.ஜ., தொண்டர்களின் எதிர்ப்பால் என்ன செய்வது என்று தெரியாமல், குமாரசாமி திகைத்து நிற்கிறார். தேவை இல்லாமல் நெருப்பில் கையை விட்டு விட்டோமா என்றும் அவர் நினைக்கிறார். ஆனால், வெளிப்படையாக காட்டி கொள்ளாமல் இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த பெங்களூரு ஆசிரியர் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் ம.ஜ.த., சார்பில் போட்டியிட்ட ரங்கநாத், தோல்வி அடைந்தார். இது குமாரசாமிக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. லோக்சபா தேர்தலில் பழைய மைசூரில் உள்ள மாண்டியா, ஹாசன், கோலார், பெங்களூரு ரூரல் தொகுதிகளை, ம.ஜ.த., கேட்டு உள்ளது. ஆனால் சொந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியால், வெற்றி குறித்து குமாரசாமிக்கு பயம் ஏற்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -

