குமாரசாமி அதிகம் 'ரீல்' விடுவார் காங்., - எம்.பி., சுரேஷ் கிண்டல்
குமாரசாமி அதிகம் 'ரீல்' விடுவார் காங்., - எம்.பி., சுரேஷ் கிண்டல்
ADDED : பிப் 26, 2024 07:22 AM

ராம்நகர்: ''முன்னாள் முதல்வர் குமாரசாமி ரீல் விடுவார். இது பற்றி வரும் நாட்களில் பேசுகிறேன்,'' என பெங்களூரு ரூரல் காங்., - எம்.பி., சுரேஷ் தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று அவர் கூறியதாவது:
நாட்டுக்கு நரேந்திர மோடி கியாரண்டி என்கின்றனர்.
ஆனால் பெங்களூரு ரூரலுக்கு, சுரேஷ் கியாரண்டி. நமது நிதியை கேட்டால், மக்கள் தொகை குறைவு என்கின்றனர். குழந்தைகள் பெறுவதை கட்டுப்படுத்தியது தவறா, மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்ததே தவறா?
உத்தர பிரதேசத்தில், அதிகமான பிள்ளைகள் பெறுவதால், நம் பணத்தை அந்த மாநிலத்துக்கு கொடுப்பார்களா.
இதை எதிர்த்து கர்நாடக மக்கள் குரல் எழுப்ப வேண்டும். நமது மக்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத்துக்கு சென்றால், வேலை கொடுக்கிறார்களா.
கன்னடர்களுக்கு கர்நாடகா ஒன்றுதான். எனவே நம் மாநிலத்தை நாம் காப்பாற்ற வேண்டும்.
பா.ஜ.,வினர் என்னை தேசத்துரோகி என்கின்றனர்; என்னை சுட்டு கொல்ல வேண்டும் என்றனர். நான் என் தனிப்பட்ட தேவைக்கு எதையும் கேட்கவில்லை. கர்நாடக விவசாயிகளுக்கு, பெண்களுக்காக மக்களின் பணத்தை கேட்கிறேன்.
ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பமும், 13,000 ரூபாய் வரி செலுத்துகிறது. ஆனால், நமக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவி கிடைக்கவில்லை. பா.ஜ., அரசு அநியாயம் செய்கிறது. நம் பணத்தை தாருங்கள் என கேட்டால், என்னை சுட்டு கொல்லும்படி ஈஸ்வரப்பா கூறுகிறார்.
அவர் பெங்களூருக்கு வரட்டும். நானே அவரை சென்று சந்திக்கிறேன். கன்னடர்களுக்காக என் உடலையே தருவேன்.
குமாரசாமி அதிகமாக 'ரீல்' சுற்றுவார். பா.ஜ.,வுடன் சேர்ந்து கொண்டு பேசுகிறார். நாங்கள் 'ரீல்' சுற்றவில்லை. வரும் நாட்களில் இது பற்றி பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

