காவி துண்டு அணிந்த குமாரசாமி தந்தை தேவகவுடா அதிருப்தி
காவி துண்டு அணிந்த குமாரசாமி தந்தை தேவகவுடா அதிருப்தி
ADDED : பிப் 02, 2024 11:07 PM

போராட்டத்தின் போது காவி துண்டு அணிந்ததால், முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது அவரது தந்தை தேவகவுடா அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளார்.
மாண்டியா கெரேகோடில் ஹனுமன் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டதை கண்டித்து, பா.ஜ., - ஹிந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், முன்னாள் முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் காவி துண்டு அணிந்திருந்தார்.
இதை வைத்து காங்கிரஸ் விமர்சனம் செய்தது. காவி துண்டு அணிவது தவறா, காவியை பார்த்தால் காங்கிரசுக்கு பயம் என்று, குமாரசாமி பதிலடி கொடுத்து இருந்தார்.
ஆனால் குமாரசாமி மீது அவரது தந்தை தேவகவுடாவே அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளார்.
தொகுதி பங்கீடு
டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவுக்கு மத்திய அரசிடம் இருந்து எதுவும் கிடைக்கவில்லை என்று கூறிய, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், தென்மாநிலங்களை பிரித்து தனி நாடு உருவாக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று கூறி இருப்பதை,நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
அவர் எதற்கு அப்படி கூறினார் என்று தெரியவில்லை. சுரேஷின் கருத்துக்கு, காங்கிரஸ் தலைவர்கள், என்ன பதில் அளிப்பர் என்று தெரியாது.
நாங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ளோம். தொகுதி பங்கீடு அடுத்த வாரத்தில் இறுதியாகும் என்று நினைக்கிறேன். எங்களுக்கு எத்தனை தொகுதி என்று தெரியவில்லை. குமாரசாமி தான், பா.ஜ., மேலிட தலைவர்களிடம் பேச்சு நடத்துகிறார்.
மருமகன்
லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று இப்போதே சொல்ல முடியாது.
தொகுதி பங்கீடு முடிந்த பின்னர், வேட்பாளர்களை பார்த்து எத்தனை தொகுதிகளில் வெற்றி என்று கூறுகிறேன்.
எனது மருமகன் டாக்டர் மஞ்சுநாத்தை, அரசியலுக்கு அழைத்து வரும் பேச்சே இல்லை. அவர் வேலையை அவர் பார்க்கிறார்; அவரை விட்டுவிடுங்கள்.
கெரேகோடு கிராமத்தில் நடந்த போராட்டத்தில், குமாரசாமிக்கு பா.ஜ., தொண்டர் ஒருவர் காவி துண்டு அணிந்து உள்ளார். ஆனாலும், குமாரசாமி காவி துண்டு அணிந்திருக்க கூடாது.
எங்கள் கட்சியின் துண்டை அணிந்து, சென்றிருக்க வேண்டும். பிரதமர் மோடியுடன் நான் சென்றால் கூட, காவி துண்டை அணிய மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .

