மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
ADDED : அக் 06, 2025 02:12 AM

மதுரை:“மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” என, தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
இதுகுறித்து, அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு காலத்தில், தமிழகம் முழுதும் 3,707 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் 23.70 கோடி ரூபாய் செலவில் செய்யப்படுகிறது.
இந்தப் பணிகளை டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்லது. கோவில் வளாகத்தில் உள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில், 2018ம் ஆண்டு பிப்ரவரியில் தீ விபத்து ஏற்பட்டது.
அதைப் புதுப்பிக்க தேவைப்படும் கற்களை எடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது உண்மை தான். ஒரே நீளமாக, 15 அடிக்கு கல் கிடைப்பது கடினம். அந்தப் பணிகள், 35.50 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.
மொத்தமுள்ள 79 துாண்களில் 18 துாண்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதி துாண்கள் செதுக்கும் பணி நடக்கிறது. அதில், 11 துாண்கள் அக்., 15 க்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பணிகளும் டிசம்பரில் நிறைவுபெறும். பணிகள் நிறைவடைந்த பின், பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்துவதா அல்லது வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து டிசம்பர் மாதமே கும்பாபிஷேகம் நடத்துவதா என்பதை கோவில் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
மீனாட்சி கோவிலுக்கு உட்பட்ட 18 உபகோவில்களில் ஒன்பது கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன.
நவம்பர் மாத இறுதிக்குள் மேலும் நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். மற்ற உப கோவிஉல்களுக்கு பிப்ரவரி இறுதிக்குள் நடத்தப்படும்.
திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் அமைப்பது குறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்து இறுதி வடிவம் கேட்டுள்ளோம். அது வந்தவுடன் டெண்டர் கோரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.