கோரிக்கைகளை நிறைவேற்ற மனு கொடுக்க வந்த கும்பகர்ணன்
கோரிக்கைகளை நிறைவேற்ற மனு கொடுக்க வந்த கும்பகர்ணன்
ADDED : ஜன 02, 2025 06:16 AM

தொட்டபல்லாபூர்: தொட்டபல்லாபூர் தாலுகாவில் குடிநீர், சாலை வசதி உட்பட பல பிரச்னைகள் உள்ளன. இதுகுறித்து அப்பகுதியினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் பல முறை மனு அளித்துள்ளனர். மனுவை வாங்கிக் கொண்டனரே தவிர, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மனுக் கொடுப்பதும், வாங்குவதுமாக இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனால், அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்க்க, யுவ சஞ்சலனா சங்கம் சார்பில் திட்டமிட்டனர்.
இளைஞர்கள், ஊரக வளர்ச்சி பவனில் மனு அளிக்க சென்றனர். அவர்களில் ஒருவர், கும்பகர்ணன் வேடத்தில் காணப்பட்டார். இதை பார்த்த அதிகாரிகள் மிரண்டனர்.
அவர்கள் கூறுகையில், 'எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, பெங்களூரு ஊரக மாவட்ட பொறுப்பு அமைச்சர் முனியப்பாவிடம் மனுக் கொடுத்தோம். இது போன்று இரண்டு ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம்.
ஆனால், மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள், கும்பகர்ணன் போல துாங்கி வழிகின்றனர். இதை விமர்சிக்கவே கும்பகர்ணன் வேடமிட்டு வந்துள்ளார்' என்றனர்.
கும்பகர்ணன் வேடம் அணிந்து, மனுக் கொடுக்க வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

