கும்பகர்ணன் தொழில்நுட்ப நிபுணர் சொல்கிறார் கவர்னர் ஆனந்தி
கும்பகர்ணன் தொழில்நுட்ப நிபுணர் சொல்கிறார் கவர்னர் ஆனந்தி
ADDED : நவ 20, 2024 02:56 AM

லக்னோ, ''கும்பகர்ணன், ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக துாங்குவார் என ராமாயணத்தில் கூறப்படுவது கட்டுக்கதை. அவர் ஒரு தொழில்நுட்ப நிபுணர். நவீன இயந்திரங்களை வடிவமைக்கும் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டவர்,'' என, உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் பேசியதை எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் உள்ள கல்லுாரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில், அம்மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ராவணனின் சகோதரர் கும்பகர்ணன், ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக துாங்கி, ஆறு மாதங்கள் விழித்திருக்கும் வழக்கம் உடையவர் என கூறப்படுவது கட்டுக்கதை. உண்மையில், கும்பகர்ணன் தொழில்நுட்பங்களை கரைத்துக்குடித்த நிபுணர்.
அவரை ஆறு மாதங்கள் ரகசிய அறையில் தங்கியிருந்து இயந்திரங்களை தயாரிக்கும்படி ராவணன் உத்தரவிட்டு இருந்தார். வெளியே செல்லாமல் ஆறு மாதங்கள் அறைக்கு உள்ளே இருந்தால் தான், அந்த ரகசியங்கள் வெளியே கசியாது என்பதால், அவரைப் பற்றி அப்படியொரு கட்டுக்கதை பரப்பப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த, 'வீடியோ'வை சமூகவலைதளத்தில் பகிர்ந்த காங்., பிரமுகர் சுப்ரியா ஸ்ரீநாத், 'பட்டமளிப்பு விழாவில் பல்கலை மாணவர்களுக்கு சிறப்பான அறிவை கவர்னர் புகட்டியுள்ளர்' என, கிண்டல் செய்துள்ளார்.