குவைத் வங்கியில் ரூ.700 கோடி மோசடி; 1,400 பேரிடம் கேரளாவில் கிடுக்கிப்பிடி விசாரணை
குவைத் வங்கியில் ரூ.700 கோடி மோசடி; 1,400 பேரிடம் கேரளாவில் கிடுக்கிப்பிடி விசாரணை
UPDATED : டிச 07, 2024 10:04 AM
ADDED : டிச 07, 2024 09:27 AM

கொச்சி: குவைத்தில் உள்ள வங்கியில் ரூ.700 கோடி மோசடி செய்த, கேரளாவை சேர்ந்த 1400 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குவைத் சுகாதார அமைச்சகத்தில் நர்ஸ்களாக கேரளாவை சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு பணம் தேவைப்படும் போது எல்லாம், சம்பள ஆதாரத்தை கொடுத்து, குவைத்தில் உள்ள வளைகுடா வங்கியில் கடன் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் சிறிய கடன்களை வாங்கி, குறிப்பிட்ட தேதிகளில் திரும்ப செலுத்தி வங்கியில் நம்பிக்கையை பெற்றுள்ளனர். அதன் பிறகு பெரிய அளவிலான கடன் தொகையை பெற்றுவிட்டு திரும்ப செலுத்தாமல் தப்பிவிட்டனர். மூன்று மாதங்களுக்கு முன் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
வங்கியில் கடன் வாங்கியவர்களின் விவரங்கள் உள்ளது. வளைகுடா வங்கியின் துணை பொது மேலாளர் கேரளா சென்று, சட்டம் ஒழுங்கு பொறுப்பு ஏ.டி.ஜி.,பியிடம் புகார் அளித்தார்.
கடன் வாங்கியவர்களின் விவரங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு தலைமறைவான நபர்களிடம் கேரளாவில் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 1400 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடிக்குப் பின்னால் நன்கு திட்டமிடப்பட்ட சதி இருப்பதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.