குவைத்தில் 37,000 பேர் குடியுரிமை ரத்து: ஒரே நாளில் நாடு இழந்து தவிக்கும் பெண்கள்
குவைத்தில் 37,000 பேர் குடியுரிமை ரத்து: ஒரே நாளில் நாடு இழந்து தவிக்கும் பெண்கள்
UPDATED : மே 29, 2025 04:39 PM
ADDED : மே 27, 2025 02:20 AM

குவைத் : குவைத்தில் 26,000 பெண்கள் உட்பட 37,000 பேரின் குடியுரிமையை குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் -அஹ்மத் அல்-சபா ரத்து செய்ததால், கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய நாடான, எண்ணெய் வளம் மிக்க குவைத்தில், 2023ல் மன்னராக பதவியேற்ற ஷேக் மெஷால் அல்- அஹ்மத் அல்-சபா, பார்லிமென்டை கலைத்ததோடு, அரசியலமைப்பு சட்டத்தின் சில பிரிவுகளையும் நிறுத்தி வைத்தார்.
மண்ணின் மைந்தர்
இரண்டு மாதங்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், 'நாட்டில் உள்ள 50 லட்சம் மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மண்ணின் மைந்தர்கள்.
'எனவே, குவைத்தை சுத்தமாக்கி, உண்மையான மக்களுக்கு திரும்ப வழங்கப்படும். குவைத் ரத்த உறவு உடையவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்' என்றார்.
அதன் ஒரு பகுதியாக, நேற்று ஒரே நாளில் 37,000 பேரின் குடியுரிமை திடீரென ரத்து செய்யப்பட்டது. அதாவது, குவைத் ஆண்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இதனால், ஒரே நாளில் 26,000 பெண்கள், தங்கள் குடும்பத்தையும் நாட்டையும் இழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கடந்த, 1990ல் குவைத் மீது, ஈராக் நடத்திய போருக்கு பின், சில சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன.
அதன்படி, குவைத் தந்தைக்கு பிறந்தவர்களுக்கு அரசியல் உரிமை, ஓட்டுரிமை, 20 ஆண்டு குடியுரிமைக்கு பின் ஓட்டுரிமை என பல சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால், பிற நாடுகளைச் சேர்ந்த பெண்கள், குவைத் ஆண்களை திருமணம் செய்து குடியேறினர். தற்போது, நிலைமை தலைகீழாகி விட்டது.
கடும் அவதி
''குடியுரிமை ரத்து உத்தரவு வெளியானதுமே வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால், செலவுக்கு கூட பணத்தை எடுக்க முடியவில்லை,'' என்கிறார், ஜோர்டானை சேர்ந்த லாமா, 50. இவருக்கு பேரன், பேத்திகளும் இருக்கின்றனர்.
பாப் பாடகர் நவல் தி குவைத்தி, நடிகர் தாவூத் ஹுசைன் துவங்கி, தொழிலதிபர்கள், குவைத் பல்கலை பேராசிரியர்கள் என பல தரப்பினரும் குடியுரிமையை பறிகொடுத்துள்ளனர்.